Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அதிரடி வீரர் ஷேவாக்கின் ஆட்டத்தை யாரும் குற்றப்படுத்த கூடாது: சனத் ஜெயசூர்யா

Posted by:
Published: Friday, September 21, 2012, 10:38 [IST]
 

அதிரடி வீரர் ஷேவாக்கின் ஆட்டத்தை யாரும் குற்றப்படுத்த கூடாது: சனத் ஜெயசூர்யா
 

கொழும்பு: சமீபகாலமாக கிரிக்கெட் போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கும் இந்திய துவக்க வீரர் ஷேவாக்கின் ஆட்டத்தை யாரும் குற்றப்படுத்த கூடாது. அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்று முன்னாள் இலங்கை கேப்டன் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரர் ஷேவாக்(33). இவர் சமீபகாலமாக கிரிக்கெட் போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். கடைசியாக ஷேவாக் கலந்து கொண்ட 3 டுவென்டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் ஷேவாக்கின் பார்ம் குறித்து பல முன்னாள் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் இலங்கை கேப்டன் ஜெயசூர்யா, அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதில் ஷேவாக்கின் ஆட்டத்தை யாரும் குற்றப்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஷேவாக் போன்ற 'மேட்ச் வின்னிங்' வீரர்களை, மக்கள் ஏன் விமர்சனம் செய்கின்றனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அதற்காக ஷேவாக் எல்லா போட்டிகளிலும் 80 அல்லது சதம் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் துவக்க வீரராக வரும் ஷேவாக் 70 ரன்களை தாண்டிவிட்டால், இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிடுகிறது.

ஒரு கிரிக்கெட் வீரரின் ஆட்டத்தில் சில தோல்விகளை கண்டால் உடனே அவரது வயதை குறித்து மக்கள் விமர்சிக்க துவங்கிவிடுகின்றனர். தோல்விகளை அடைவதால், ஒரு வீரர் வயதாகிவிட்டார் என்று கருத கூடாது. ஒரு வீரர் முழு உடன் திறனுடன் இருந்தால், அவருக்கு வயது ஒரு பொருட்டல்ல.

கேப்டன் பொறுப்பு என்பது ஒரு படிப்பை போன்றது. 8 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்ததால், டோணி கேப்டன் பொறுப்பிற்கு தகுதியானவர் அல்ல என்று கூற முடியாது. ஆனால் அவரது கேப்டன் பொறுப்பு குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது. என்னை பொறுத்த வரை எல்லாரும் தவறுகளின் மூலம் தான் பல காரியங்களை கற்று கொள்கின்றனர். அதேபோல டோணியும், தன் மீதான விமர்சனத்தை பார்த்து, திறமையை அதிகரித்து கொள்ள வேண்டும்.

இந்தியாவிற்கு தற்போதையை நிலையில் மேலும் ஒரு பந்துவீச்சாளர் தேவையா? என்பது தெரியவில்லை. ஆனால் அணியில் உள்ள எல்லா பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் எதிரணியினர் அடித்து ஆடினால் சிக்கல் தான். இந்தியாவை பொறுத்த வரை பந்துவீச்சாளர்களுக்கு சிறந்த தாக்குதல் திறமை உண்டு. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் 180க்கும் மேற்பட்ட ரன்களை விட்டு கொடுத்துள்ளனர்.

இலங்கை வீரர் அஜந்தா மென்டிஸின் காயம் காரணமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் தற்போது அவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கை கிரிக்கெட் அணிக்கு அவரது ஆட்டம் நீண்ட காலத்திற்கு தேவை.

இலங்கை அணியை பொறுத்த வரை சொந்த மண்ணில் களமிறங்குவதால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூற முடியாது. இலங்கை அணி ஒரு குழுவாக செயல்படுவதால் தான் வெற்றிகள் கிடைக்கிறது என்றார்.

English summary
Virender Sehwag's prolonged form slump has become a cause of concern but the struggling opener today received the backing of another swashbuckler Sanath Jayasuriya who said India needed an "impact player" like him to win matches.
கருத்தை எழுதுங்கள்