டெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த மாதம் (ஜூலை) கடைசி வாரம் வரை போட்டிகள் எதுவும் இல்லாத நிலையில், இளம்வீரர்களான கெளதம் கம்பிரும், விராத் கோஹ்லி தினமும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு சர்வதேச போட்டிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. உள்ளூர் அணிகள் பங்கேற்ற ஐபிஎல் 5 தொடர் கடந்த ஏப்ரல் 4ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மட்டுமே பங்கேற்றனர்.
அதன்பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாத நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜாலியாக ஓய்வு எடுத்து வருகின்றனர். அடுத்த மாதம்(ஜூலை) 22ம் தேதி இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் துவங்குகிறது.
இந்திய கேப்டன் டோணி, ராணுவத்தின் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவியை வகித்து வருகிறார். இதனையடுத்து கடந்த வாரத்தில் காஷ்மீரில் உள்ள நாட்டின் எல்லை பகுதிகளுக்கு சென்ற டோணி, ராணுவ உடையில் ஊர் சுற்றி பார்த்தார். அப்போது ராணுவ முகாம்களுக்கு சென்ற டோணி, ராணுவ வீரர்களுடன் உரையாடினார்.
தற்போது தனது எல்லையில் டூரை முடித்துள்ள கேப்டன் டோணி, சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள குடும்பத்துடன் ஓய்வை கழித்து வருகிறார். இதேபோல மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
ஆனால் இந்திய அணியின் இளம்வீரர்களான கெளதம் கம்பிரும், விராத் கோஹ்லியும் மட்டும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து கம்பிர் கூறியதாவது, எனக்கு அதிகளவில் ஸ்பான்சர்கள் உள்ளனர். எனவே எனது ஆட்டம் பாதிக்கப்பட கூடாது. இதனால் நான் தினமும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.
பயிற்சி குறித்து விராத் கோஹ்லி கூறுகையில், எப்போதும் பயிற்சியில் இருப்பதன் மூலம் போட்டிகள் வரும் போது சிறப்பாக செயல்பட முடியும் என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக டோணி உள்ள நிலையில், துணை கேப்டன் பதவி பல தலைகளை தாண்டி விராத் கோஹ்லியை எட்டியுள்ளது. இந்திய அணியின் துணை கேப்டனாக நீண்டநாட்கள் பதவி வகித்த ஷேவாக், ஆசிய கோப்பையின் போது நீக்கப்பட்டு விராத் கோஹ்லிக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
அதேபோல வளர்ந்து வரும் வீரரான கம்பிர், ஐபிஎல் 5 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமையேற்று கோப்பையை பெற்று கொடுத்துள்ளார். இதனால் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதில் விராத் கோஹ்லி, கம்பிர் இடையே மறைமுக போட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.









