பெங்களூர்: புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், சக வீரர்களான விராத் கோஹ்லி, பிரவீண் குமார் ஆகியோருடன் இந்தி சினிமாவுக்கு சென்று வந்துள்ளதாக டுவி்ட்டரில் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள இந்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், தற்போது கொஞ்ச கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்பி வருகிறார். இதை அவரது சமீபகால நடவடிக்கைகள் உறுதி செய்கின்றன.
கடந்த ஐபிஎல் 5 தொடரின் போது, புனே வாரியர்ஸ் அணி பங்கேற்ற சில போட்டிகளின் போது, புனே ஆடுகளத்திற்கு வந்த யுவராஜ் சிங் சிறிதுநேரம் பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததால், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அடுத்த மாதம் இலங்கை சுற்றுப்பயணம் துவங்க உள்ள நிலையில், இந்திய சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வரும் யுவராஜ் சிங், நேற்று இந்தி சினிமாவிற்கு சென்றதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து யுவராஜ் சிங் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
இப்போது தான் கேங்ஸ் ஆப் வேஸிபர் என்ற இந்தி சினிமாவை பார்த்துவிட்டு வந்தோம். என்னுடன் வந்த விராத் கோஹ்லியும், பிரவீண் குமாரும், சினிமா காட்சிகளை ரசித்து பார்த்தனர்.
சினிமாவில் வரும் நடிகர் மனோஜ் பஜ்பாய் சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் அவருக்கு சினிமாவில் மீண்டும் ஒரு சிறப்பான இடத்தை பெற்று தர உதவும். அதேபோல நானும் இந்திய அணிக்கு மீண்டும் விரைவில் திரும்புவேன் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரில் பயிற்சியின் இடையே பேசிய யுவராஜ் சிங், தற்போது உடல்நிலை தேறி வரும் நான், இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பையில் கலந்து கொள்ள இலக்கு நிர்ணயித்து உள்ளேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.










