பெங்களூர்: இந்திய சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், எக்சக்ஸ் கவுண்டி கிளப் அணிக்காக விளையாடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க உள்ள நிலையில், தற்போது இங்கிலாந்து கவுண்டி அணிக்காக ஹர்பஜன் சிங் விளையாட முடிவு செய்துள்ளார்.
இந்திய சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்(32). கடந்த ஆண்டு(2012) இந்திய அணி உலக கோப்பையை வென்ற பிறகு, சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற ஹர்பஜன் சிங் காயம் காரணமாக ஓய்வு எடுத்து கொண்டார். ஆனால் அதன்பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
இந்த நிலையில் வரும் 21ம் தேதி இலங்கை சுற்றுப்பயணத்திற்கு செல்ல உள்ள இந்திய அணியில் 2வது சுழல்பந்துவீச்சாளராக, ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஹர்பஜன் சிங், இங்கிலாந்து கவுண்டி அணியான எஸ்சக்ஸ் அணிக்காக விளையாட, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஐபிஎல் 5 தொடரில் எதிர்பார்க்கப்பட்ட அளவு சோபிக்க தவறிய ஹர்பஜன் சிங், இங்கிலாந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி தேர்வுக் குழுவினரை கவர தீர்மானித்துள்ளார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது,
தற்போது நான் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காத நிலையில், எனது பார்மை மீட்க முடியாது. எனவே கவுண்டி அணியில் விளையாட முடிவு செய்துள்ளேன். கவுண்டி போட்டிகள் 4 நாட்கள் போட்டிகளை கொண்டது. எனவே எனது பந்துவீச்சில் முன்னேற்றம் அடைய முடியும். மேலும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசவும், கவுண்டி போட்டிகள் எனக்கு உதவும்.
இது குறித்து எஸ்சக்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்திய சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், எஸ்சக்ஸ் அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்படி வரும் 11ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள குளுசிஸ்டர்சைன் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்பஜன் பங்கேற்பார் என்று தெரிவித்துள்ளது.
எஸ்சக்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பால் கிரேசன் கூறியதாவது,
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் சிறந்த சுழல்பந்துவீச்சாளாராக உள்ள ஹர்பஜன் சிங், எங்கள் அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹர்பஜன் ஒரு மேட்ச் வின்னிங் வீரர். எனவே அவரது பணி எங்கள் அணிக்கு பெரும் பக்கபலமாக அமையும் என்று நம்புகிறேன் என்றார்.










