டெல்லி: டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்ல, ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளிலும் விளையாடவும் நான் தயாராக இருக்கிறேன் என்று இந்திய சுழல்பந்துவீச்சாளர் பிரக்யன் ஓஜா தெரிவித்துள்ளார்.
இந்திய சுழல்பந்துவீச்சாளர் பிரக்யன் ஓஜா(25). இதுவரை 16 ஒருநாள் மற்றும் 6 டுவென்டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி உள்ளார். இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 62 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ஓஜாவிற்கு, ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளில் வாய்ப்பு மிக குறைவாகவே கிடைத்துள்ளது.
இதனால் இந்திய அணியில் ஹர்பஜன் சிங் அல்லது அஸ்வின் முதல் தர சுழல்பந்து வீச்சாளர்களாகவும், ஓஜா 2ம் தர பந்துவீ்ச்சாளராகவும் வாய்ப்பு பெறுகிறார். கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இவர், தற்போது ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளிலும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே நான் சிறப்பாக விளையாடுவதாக ஒரு பொதுவான கருந்து எழுந்துள்ளது. ஆனால் என்னால் ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியும்.
ஓய்வு நேரங்களில் நான் பணியாற்றும் பாரத் பெட்ரோலியம் அணிக்காக விளையாடி வருகிறேன். இதன் மூலம் எனது பந்துவீ்ச்சு திறமையை தக்க வைத்து கொள்கிறேன். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவது எனது கையில் இல்லை. ஆனால் நான் தேர்வாகும் போது, சொதப்பிலாக ஆடிவிட கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.
இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால் அதை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஏனெனில் இந்திய அணியில் நுழைவதற்கு கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் கிடைக்கும் வாய்ப்பை 100 சதவீதம் பயன்படுத்துவதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
என்னை ஒரு கட்டுப்பாடான பந்துவீச்சாளர் என்று நான் கருதவில்லை. ஆனால் பிஷன் சிங் பேடி, வெங்கடபதி ராஜூ, சுனில் ஜோஷி ஆகியோரை போல பந்து வீசுகிறேன். இவர்கள் யாரும் கட்டுப்பாடான பந்துவீச்சாளர்கள் அல்ல. பொதுவான எனது பந்துவீச்சில் பேட்ஸ்மேன்களை அடித்து ஆட விட்டு, விக்கெட்களை வீழ்த்துகிறேன் என்றார்.
கடந்த 2010 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த பிரக்யன் ஓஜாவிற்கு, இந்த மாதம் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு செல்ல உள்ள இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.










