Search
Newsletter
 
Share This Story

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ஷோவாக், ஜாகிர்கான் இடம்பெறுவார்களா?

Posted by:
Published: Wednesday, July 4, 2012, 10:16 [IST]

மும்பை: இந்த மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செல்ல உள்ள இந்திய அணியின் தேர்வு இன்று மும்பையில் நடைபெற உள்ளது. இதில் அதிரடி துவக்க வீரர் ஷேவாக், வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர்கான் மற்றும் பல புதுமுகங்கள் அணியில் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 21ம் தேதி இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ஒரே ஒரு டுவென்டி20 போட்டியிலும் பங்கேற்க உள்ளது.

indian team selection srilankan tour today

இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வு, தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையிலான குழு இன்று மும்பையில் கூடுகிறது. இதில் மூத்த மற்றும் இளம்வீரர்களின் கலவை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

ஷேவாக், ஜாகிர்கான்:

காயம் காரணமாக இந்திய அதிரடி துவக்க வீரர் ஷேவாக், கடந்த மார்ச்சில் நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான தொடரில் பங்கேற்கவில்லை. அதன்பிறகு ஐபிஎல் 5 தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து தனது உடல்திறனை நிரூபித்துள்ளார். இதனால் இன்று நடைபெற உள்ள அணி தேர்வில் ஷேவாக் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

அதேபோல வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர்கானும் காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி உள்ளதால், அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

இளம்வீரர்கள்:

ஐபிஎல் தொடரில் சொதப்பிய ரவீந்திர ஜடேஜா, யூசுப் பதான் ஆகியோருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஷேவாக் அணிக்கு திரும்பும் பட்சத்தில் இளம்வீரர் மனோஜ் திவாரிக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு குறைவே.

சுழல்பந்துக்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களில் அணிக்கு 2 சுழல்பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே அஸ்வினின் இடம் அணியில் உறுதியாகி உள்ளது. மேலும் ஜடேஜா நீக்கப்படும் பட்சத்தில் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படலாம்.

சமீபகாலமாக ஒருநாள் மற்றும் டுவென்டி போட்டிகளில் பங்கேற்க அதிக ஆர்வம் காட்டாத சச்சின், இலங்கை சுற்றுப்பயணத்திற்கு செல்வாரா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

மேலும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா 'ஏ' அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம்வீரர்களான புஜாரா, சக்சேனா, ஆகியோருக்கும் இந்திய அணியில் வாய்ப்பளிக்கலாம்.

English summary
Indian cricket team selection for Srilankan tour will be made today by the selection committee. Sehwag, Zaheer Khan, Harbhajan Singh is likely to come back to the Indian team.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil