கொல்கத்தா: சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் ஒருநாள் முறியடிக்கப்படுவது உறுதி. அந்த நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சாதனைகளின் மன்னனாக உலா வருபவர் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்(39). டெஸ்ட் மற்றும் ஒருநாள் அரங்கில் அதிக போட்டிகள், அதிக ரன்கள், அதிக சதங்கள் என்று அவரது சாதனை பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது. சர்வதேச அளவில் கிரிக்கெட் உலகில் யாராலும் எளிதில் முறியடிக்க முடியாத வகையில், சச்சின் 100 சதங்களை அடித்துள்ளார்.
இந்த நிலையில் சச்சினின் சாதனைகள் அனைத்தும் ஒருநாள் நிச்சயம் முறியடிக்கப்படும் என்று முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நான் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற காலத்தில் சுனில் கவாஸ்கரின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்று பரவலாக பேச்சப்பட்டது. ஆனால் தற்போது அவரது சாதனைகளில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டுள்ளன. சாதனைகள் என்பது முறியடிப்பதற்காக படைக்கப்படுபவை.
சச்சின் சிறப்பான சாதனை மைல்கல்களை எட்டியுள்ளார். ஆனால் அவரது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால், அது மனித இனத்திற்கே பின்னடைவான ஒரு சம்பவம் ஆகிவிடும். சச்சினின் சாதனைகள் முறியடிக்கப்படும் நாளை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம்.
ஒருவரிடம் திறமை மட்டுமே இருந்து பயனில்லை. எதிர்காலத்தை குறித்து தெளிவாக திட்டம் இருக்க வேண்டும். நான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் நேரத்தில், இந்திய அணிக்காக 2 வீரர்கள் ஆட வந்தார்கள். அதில் ஒருவர் சச்சின், மற்றொருவர் வினோத் காம்பளி. அனைத்து ஊடகங்களும் இருவரையும் சிறந்த வீரர்கள் என்று தான் குறிப்பிட்டன.
ஆனால் காம்பளியிடம் எதிர்காலத்தை குறித்த தெளிவான வரைப்படம்(திட்டம்) இருக்கவில்லை. முன்னேற்றத்திற்கான தகுந்த ஒழுக்கம் இருக்கவி்ல்லை. ஒருவர் தன்னிடம் உள்ள திறமைகளை தகுந்த முறையில் புரிந்து வைத்திருந்தால் மட்டுமே, சச்சினை போன்ற சாதனைநாயகனாக உருவாக முடியும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் மாடல் இருக்க வேண்டும். நாம் ரோல் மாடல்களை வளர்ச்சியின் எல்லையாக கொள்ளாமல், அவர்களையும் தாண்டி முன்னேறி செல்ல வேண்டும்.
குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததது. குழந்தைகளை புரிந்து கொண்டு அவருடன் இணைந்து செயல்பட வேண்டும். இன்று எனது மகள், எனக்கு சிறந்த தோழியாக உள்ளார். தொழில்நுட்ப ரீதியாக என்னை விட அதிக அறிவு கொண்ட எனது மகளின் கருத்துகளை மதிக்கிறேன் என்றார்.










