லண்டன்: இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை தொடருக்கான 30 பேர் கொண்ட இங்கிலாந்தின் உத்தேச அணியில் ஓய்வு பெற்ற அதிரடி வீரர் கெவின் பீட்டர்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்த 12 அணிகளின் 30 பேர் கொண்ட உத்தேச அணி விபரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இங்கிலாந்து அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கெவின் பீட்டர்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளின்படி, ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளில் 2 வகையான போட்டிகளிலும் ஒரு வீரர் விளையாட வேண்டும். ஒருநாள் போட்டியில் இருந்து மட்டும் ஓய்வு பெற முடியாது. இதனால் இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக பீட்டர்சன் கடந்த மாதம் அறிவித்தார்.டெஸ்ட் போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்த போவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அதன்பிறகு மனமாறிய பீட்டர்சன், டுவென்டி20 உலக கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்தார். இதற்காக தனது பெயர் பரிசீலிக்குமாறு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட 30 பேர் கொண்ட இங்கிலாந்தின் உத்தேச வீரர்கள் பட்டியலில் பீட்டர்சனின் பெயர் இடம் பெறவில்லை.
கடந்த முறை டுவென்டி20 உலக கோப்பையின் தொடர் நாயகன் விருது பெற்ற பீட்டர்சனுக்கு, இந்த ஆண்டு வாய்ப்பு கிடைக்காமல் போனது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.










