துபாய்: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெற்றி பெறுவதன் மூலம் ஐசிசி ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இந்திய அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) மூலம் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணிகளின் சிறப்பான ஆட்டத்தை பொறுத்து அவ்வப்போது தரவரிசை வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஒருநாள் போட்டிகளின் அணிகளுக்கான தரவரிசையில், இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
கடந்த 3 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளாத இந்திய அணி, தற்போது பட்டியலில் முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரு டுவென்டி20 போட்டியில் கலந்து கொள்ள உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை ஹம்பன்டேட்டாவில் மதியம் 2.30 மணிக்கு துவங்க உள்ளது.
இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் உள்ள முதல் 5 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையிலான புள்ளிகளின் வேறுபாடு மிகவும் குறைவாக உள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா(119) அணியும், 2வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவும் உள்ளது. அதன்பிறகு இங்கிலாந்து(118), இந்தியா(117), இலங்கை(112) என்று வரிசையாக உள்ளது.
தற்போது 4வது இடத்தில் உள்ள இந்திய அணி, இலங்கைக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றால், முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை(119) பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்க முடியும். அதேபோல இலங்கை அந்த 5 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றால், இலங்கை முதலிடத்தை பிடிக்கும்.
கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பரில் ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்தியாவிற்கு, 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி, இந்தியா கோப்பையை கைப்பற்றியது போல, இலங்கை தொடரை கைப்பற்றி மீண்டும் இந்தியா முதலிடத்திற்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.










