கொழும்பு: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கம் வெல்ல வேண்டும் என்று இலங்கையில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியினர் விரும்புவதாக, இந்திய துவக்க வீரர் கெளதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இன்று நடைபெற உள்ள வில்வித்தை, டென்னிஸ், பளு தூக்குதல், குத்து சண்டை, பாட்மிண்டன் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று, அந்நாட்டு அணியுடன் 3வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளது. ஆனால் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை பெற வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக, இந்திய துவக்க வீரர் கம்பிர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இலங்கையில் நான் 3வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளேன். இந்த நிலையில் நான் எப்படி லண்டனில் நமது வீரர்கள் எத்தனை பதக்கம் வெல்லுவார்கள் என்பதை யூகிக்க முடியும். ஆனால் என்னை பொறுத்த வரை, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நாட்டிற்காக ஆடுவதே ஒரு விளையாட்டு வீரருக்கு பெரிய பெருமையாக கருதுகிறேன்.
ஒரு கிரிக்கெட் வீரர் என்ற நிலையில், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு அதிக வரவேற்பு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மற்ற விளையாட்டுகளுக்கும் இந்திய மக்கள் ஊக்கம் அளிக்க வேண்டும். இந்திய ஊடகங்கள் லணடனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி குறித்து செய்திகளை ஒளிபரப்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒருநாள் தொடர் நடைபெறுவதால், ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக பார்க்க முடியாது. இருப்பினும் நம் நாட்டிற்கு துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை, வில்வித்தை, பாட்மிண்டன் போன்ற போட்டிகளில் பதக்கம் பெற வாய்ப்பு உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் பதக்கம் வெல்ல இந்திய கிரிக்கெட் அணியாக வாழ்த்துகளை தெரிவிக்கிறோம் என்றார்.










