கொழும்பு: இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் சங்கக்காரா காயம் அடைந்தார். இதனால் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் மீதமுள்ள 2 போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரு டுவென்டி20 போட்டியில் பங்கேற்று வருகிறது. இதில் ஒருநாள் தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இன்னும் 2 ஒருநாள் போட்டிகள், ஒரு டுவென்டி20 போட்டி மீதமுள்ளது.
இந்த நிலையில் கடந்த 28ம் தேதி கொழும்புவில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் இலங்கை அணி அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்த நிலையில், அடுத்து வந்த சங்கக்காரா, கேப்டன் ஜெயவர்த்தனே உடன் ஜோடி பொறுமையாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
இப்போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் டின்டா வீசிய 15வது ஓவரின் கடைசி பந்தை சங்கக்காரா எதிர்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக பந்து சங்கக்காராவின் கையுறையை தாக்கியது. அதன்பிறகு கையில் வலி இருந்த போதும், தொடர்ந்து பேட்டிங் செய்த சங்கக்காரா 73 ரன்கள் எடுத்து, இலங்கை அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன்பிறகு டின்டாவின் பந்திலேயே அவுட்டானார்.
இந்த நிலையில் சங்கக்காராவின் கை விரலில் ஏற்பட்ட காயத்தினால், தற்போது வலி அதிகமாக உள்ளது. இதனால் இந்தியாவிற்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டுவென்டி20 போட்டியில் இருந்து சங்கக்காராவிற்கு ஓய்வு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கக்காராவின் கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, அடுத்த மாதம்(ஆகஸ்ட்) 11ம் தேதி துவங்க உள்ள ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் டுவென்டி20 தொடரில் பங்கேற்பதிலும் சந்தேகம் நீடிக்கிறது.










