Search
Newsletter
 
Share This Story

உலகிலேயே அதிக வருமானம் பெறும் கிரிக்கெட் வீரர் டோணி-போர்ப்ஸ் இதழ்

Posted by:
Published: Thursday, August 2, 2012, 14:07 [IST]

Dhoni Is World S Highest Earning Cricketer Forbes
 

டெல்லி: உலகிலேயே அதிக வருமானம் பெறும் கிரிக்கெட் வீரர்களில் முதல் 10 பேர் அடங்கிய பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 6 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்திய கேப்டன் டோணி முதலிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை தவிர, விளம்பரங்கள், தொழில்கள் என்று பல வகைகளில் வருமானம் கிடைக்கிறது. இதனால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று கிடைக்கும் வருமானத்தை விட, விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது.

இந்த நிலையில் பிரபல போர்ப்ஸ் இதழ், உலகில் அதிக வருமானம் பெறும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 வீரர்களின் பட்டியலில் 6 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலின் முதலிடத்தில் இந்திய கேப்டன் டோணி உள்ளார்.

இந்திய கேப்டன் டோணிக்கு, கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் ஆண்டிற்கு 35 லட்சம் அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கிறது. ஆனால் அவர் விளம்பரங்களில் தோன்றுவதன் மூலம், ஆண்டிற்கு 2 கோடியே 30 லட்சம் டாலர் சம்பாதிக்கிறார். விளம்பரங்களில் நடித்து அதிக வருமானம் பெறும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலிலும் டோணிக்கு தான் முதலிடம். இந்திய கேப்டன் டோணியின் ஆண்டு வருமானம் 2 கோடியே 65 லட்சம் டாலர்.

அதிக வருமானம் பெறும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இவரது ஆண்டு வருமானம் 1 கோடியே 86 லட்சம் டாலர். இதில் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் சச்சினுக்கு 1 கோடியே 65 லட்சம் டாலர் வருமானம் கிடைக்கிறது. மீதமுள்ள தொகை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் சச்சினுக்கு கிடைக்கிறது.

இதேபோல இந்திய வீரர்களான கெளதம் கம்பிர்(73 லட்சம் டாலர்), விராத் கோஹ்லி(71 லட்சம் டாலர்), ஷேவாக்(69 லட்சம் டாலர்), யூசுப் பதான்(37 லட்சம் டாலர்) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

வெளிநாட்டு வீரர்களான ஷேன் வாட்சன்(59 லட்சம் டாலர்), மைக்கேல் கிளார்க்(49 லட்சம் டாலர்), பிரட் லீ(48 லட்சம் டாலர்), ரிக்கி பாண்டிங்(41 லட்சம் டாலர்) ஆகியோர் உலகின் அதிக வருமானம் பெறும் கிரிக்கெட் வீரர்களின் டாப்-10 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

English summary
MS Dhoni topped the list of the world's highest earning cricketers compiled by Forbes magazine, followed by Sachin Tendulkar, as six Indians made it to the list's top-10.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil