கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடனான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நாளை கலந்து கொள்ள உள்ளது. இதில் வெற்றி பெற்றால் ஒருநாள் தரவரிசையில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டுவென்டி20 போட்டியில் கலந்து கொண்டு வருகிறது. இதில் 4 ஒருநாள் போட்டிகளின் முடிவில், இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் இந்தியா வெற்றி பெற்றால், டோணி தலைமையிலான இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றி ஆகும். மேலும் 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றுவதன் மூலம் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற முடியும்.
இந்திய அணி:
இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். துவக்க வீரர்களாக களமிறங்கும் ஷேவாக், கம்பிர் ஜோடி அணிக்கு சிறந்த துவக்கத்தை அளிக்கிறது. அதனால் அடுத்து வரும் விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, கேப்டன் டோணி ஆகியோர் ரன்களை சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்துகின்றனர்.
ஆனால் மிடில் ஆடரில் வரும் ரோஹித் சர்மா தொடர்ந்து சோபிக்க மறுக்கிறார். 4வது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்ட மனோஜ் திவாரி, ஆல் ரவுண்டராக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த நிலையில் நாளைய போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் நீடிக்கிறது.
பந்துவீச்சை பொறுத்த வரை இர்பான் பதான், ஜாகிர்கான் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். சுழலில் கலக்கும் அஸ்வின், மனோஜ் திவாரி, ஷேவாக் ஆகியோர் மீண்டும் தங்களின் திறமையை காட்ட உள்ளனர்.
இலங்கை அணி:
இலங்கை அணியை பொறுத்த வரை அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான சங்கக்காரா காயமடைந்து, தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். இதனால் அணியின் பேட்டிங் பலம் குறைந்து உள்ளது. துவக்க வீரர்கள் தில்ஷன், தரங்கா ஜோடி அதிக பந்துகளை வீணாக்குகிறது.
இதனால் அடுத்து வரும் கேப்டன் ஜெயவர்த்தனே, ரன்களை சேர்க்க திணறுகிறார். ஆனால் கடைசி கட்டத்தில் வரும் ஆல் ரவுண்டர்களான ஆஞ்சிலோ மேத்யூஸ்,திருமன்னே, பெரேரா, மென்டிஸ் ஆகியோர் அதிரடியாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தி விடுகின்றனர். பந்துவீச்சை பொறுத்த வரை மலீங்கா சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
'ஹாட்ரிக்' வாய்ப்பு:
ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில், நாளைய போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற இலங்கை அணி முயற்சி செய்யும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் நாளைய போட்டியில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெற இந்திய அணி முயற்சி செய்யும். எனவே நாளைய போட்டி விறுவிறுப்பு மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.










