மும்பை: கிரிக்கெட் உலகில் எதிரணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து தூள் கிளப்பும், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு, செஸ் போட்டியில் ஆட தெரியாதாம். அதை அவரே ஒத்து கொண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சச்சின். தனது சிறப்பான பேட்டிங் மூலம் எதிரணி பந்துவீச்சாளர்களை மிரட்டுபவர். மேலும் கிரிக்கெட் உலகில் எட்ட முடியாத பல சாதனை படிகளை கடந்தவர். இலங்கை சுற்றுப்பயணத்திற்கு சென்ற இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்று கொண்ட சச்சின், மும்பையில் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார்.
அகில இந்திய பார்வையற்றோர் செஸ் வாரியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசிய சச்சின், தனக்கு செஸ் விளையாட பிடிக்கும் என்றாலும், அதில் காய்களை நகர்த்தி வெற்றி பெற தெரியாது என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
எனது சிறு வயதில், சகோதரன் உடன் செஸ் விளையாடி உள்ளேன். செஸ் விளையாடுவது எனக்கு பிடிக்கும் என்றாலும், அதில் பெரும்பாலும் தோல்வி தான் கிடைத்துள்ளது. அதில் காய் நகர்த்தி வெற்றி பெற தெரியாது.
முதன் முதலாக நான் எனது மாமா உடன் செஸ் விளையாடினேன். அவர் செஸ் குறித்து ஒரு புத்தகம் கூட எழுதியுள்ளார். எனது மகன் சிறியவனாக இருந்த போது, அவனுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. செஸ் விளையாட்டில் அதிக தீவிரம் காட்டிய அவனை, செஸ் கற்க டியூசனுக்கு கூட அனுப்பி வைத்தோம்.
எங்கள் வீட்டிற்கு வரும் உறவினர், நண்பர்கள் என்று யாராக இருந்தாலும், அவர்களுடன் செஸ் விளையாடுவதை, எனது மகன் வழக்கமாக கொண்டிருந்தான். அவனுடன் செஸ் விளையாடிய பிறகு தான், அவர்கள் வந்த வேலையில் ஈடுபட முடியும்.
ஆனால் அவன் வளர்ந்து வந்த போது, மல்யுத்தம், கால்பந்து என்று அவனது விருப்பங்கள் மாறியது. கடைசியாக அவனுக்கு கிரிக்கெட் மீது விருப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.










