பல்லேகல :இலங்கைக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்திலும் இந்தியா வென்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
இந்திய அணி
இலங்கையில் பல்லகெலேவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியாவின் டோணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். வீரேந்திர சேவாக்குக்கு பதிலாக ரஹானேவை டோணி களமிறக்கினார். அவருடன் கம்பீர் கை கோர்த்தார். ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரஹானே 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். களத்தில் நின்ற கம்பீருடன் கோஹ்லி கை கோர்த்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர். இந்தியாவின் ஸ்கோர் 77ஆக இருந்தபோது கோஹ்லி விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 35 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்களை எடுத்திருந்தார்.
கோஹ்லி வெளியேற பிறகு வந்த ரோஹித் சர்மா சோபிக்கவில்லை. இத்தொடர் முழுவதுமே அவர் சொதப்பலான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தினார். இத்தொடரில் அவர் எடுத்த அதிகபட்ச ரன்கள் வெறும் 5. 5 போட்டிகளில் 2 போட்டியில் டக் அவுட் வேறு. நேற்றைய போட்டியிலும் வழக்கம் போல 4 ரன்களை எடுத்துவிட்டு நடையைக் கட்டிவிட்டார்.
கம்பீருடன் இணைந்த மனோஜ்திவாரி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் முனைப்பாக இருந்தார். அணியின் ஸ்கோர் 197 ஆக இருந்தபோது திவாரி வெளியேறினார். 68 பந்துகளில் 65 ரன்கள் என்ற பொறுப்பான ஆட்டத்தை மனோஜ்திவாரி வெளிப்படுத்திருந்தார். ஆனால் அடுத்து ஆடவந்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறியது அதிர்ச்சியளித்தது.
களத்தில் அசையாம நின்ற கம்பீருக்கு கேப்டன் டோணி கை கொடுத்தார். தொடக்கத்திலேயே 2 பவுண்டரிகளை டோணி விளாசினார். ஆனால் கம்பீர் இம்முறை அவுட் ஆகிவிட்டார். 99 பந்துகளை எதிர்கொண்ட கம்பீர் 88 ரன்களை எடுத்திருந்தார். உள்ளே நுழையும்போது அதிரடியாக ஆடத் தொடங்கிய டோணி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். அவருடன் இர்பான் பதான் இணைந்திருந்தார். போட்டியின் இறுதிக் கட்டம் நெருங்க டோணியின் அதிரடி ஆரம்பமானது. 46-வது ஓவரில் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை டோணி விளாசினார். எப்படியும் 300 ரன்களை இந்தியா தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் ஆட்ட முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்களை எடுத்தது. டோணி38 பந்துகளில் 58 ரன்களை எடுத்திருந்தார். இதில் 8 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும்.
இலங்கை அணி
அடுத்து விளையாடிய இலங்கை அணியில் அதிகபட்சமாக திரிமனே 77 ரன்களை அடித்து ஆட்டத்தை கலக்கிக் கொண்டிருந்தார். இதேபோல் மெண்டிஸ் 72 ரன்களை எடுத்திருந்தார். மொத்தம் 45.5 ஓவர்களில் 274 ரன்களுக்கு இலங்கை அணியை இந்தியா சுருட்டியது, இர்பான் பதான் அதிரடியாக பந்துகளை வீசினார். அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவும் 43-வது ஓவரில் அற்புதமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தமது அபாரத்தை வெளிப்படுத்தினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 4-1 என்ற கணக்கில் தொடரை தம்வசமாக்கியது இந்தியா. மேலும் ஒருநாள் போட்டி தரவரிசையிலும் இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேறியது.










