பெங்களூர்: இந்தியாவிற்கு இந்த மாதம் சுற்றுப்பயணம் வர உள்ள நியூசிலாந்து அணியில், முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ரோஸ் டெய்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாதம் இறுதியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வர உள்ளது. அப்போது இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகள், 2 டுவென்டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் டேனியல் வெட்டோரிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 0-2 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அந்த தொடரில் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி காயம் அடைந்தார். இந்த நிலையில் காயம் ஆறாத நிலையில் இந்தியாவுடன் டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுழல்பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய மண்ணில், டேனியல் வெட்டோரிக்கு பதிலாக, ஜீத்தன் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பிராங்க்ளின் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தேர்வாளர் அமைப்பின் மேலாளர் கிம் லிட்டில்ஜான் கூறியதாவது,
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதன் மூலம் நியூசிலாந்து அணியின் அனுபவம் அதிகரிக்கும் என்றாலும், அது சவால் மிகுந்தது. டேனியல் வெட்டோரியின் காயம் காரணமாக பட்டேலுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பட்டேலுக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
நியூசிலாந்து அணியின் பேட்டிங்கை பலப்படுத்தும் வகையில், ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பிராங்க்ளின் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய சூழ்நிலையில் ஆடி அனுபவம் கொண்ட ஜேம்ஸ், அணிக்கு பக்கப்பலமாக இருப்பார். இளம்வீரரான டீன் பிரவுன்லை இன்னும் தனது ஆட்டத்தில் முன்னேற்றம் காட்ட வேண்டியுள்ளது. என்றார்.
நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் டேனியல் வெட்டோரியின் ஓய்வு, இந்திய அணிக்கு பெரும் பலமாக கருதப்படுகிறது. இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.










