கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர்களான ஜெயவர்த்தனே, தில்ஷன், சங்கக்காரா ஆகியோர் ஓய்வு பெற்றால், சர்வதேச அளவில் இலங்கை அணி பெரும் இழப்புகளை சந்திக்கும் என்று முன்னாள் இலங்கை கேப்டன் சனத் ஜெயசூர்யா கவலை தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியில் கேப்டன் ஜெயவர்த்தனே, தில்ஷன், சங்கக்காரா ஆகியோர் அனுபவ வீரர்களாக உலா வருகின்றனர். இதில் இலங்கை அணியின் கேப்டனாக உள்ள ஜெயவர்த்தனே, சிறப்பாக பேட்டிங் செய்து அணியை வழிநடத்தி வருகிறார்.
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆகிய இரு பணிகளையும் பொறுப்பாக செய்து வரும் சங்கக்காரா, இலங்கை அணியின் முக்கிய வீரர் ஆவார். அதேபோல இலங்கை அணிக்கு அதிரடி துவக்கத்தை அளிக்கும் தில்ஷன், சிறப்பாக பீல்டிங் செய்யும் திறன் கொண்டவர்.
இலங்கை அணியில் மேற்கண்ட 3 அனுபவ வீரர்களும், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றால், இலங்கை அணிக்கு பெரும் இழப்பாக அமையும் என்று முன்னாள் இலங்கை கேப்டன் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான அர்ஜூன ரனதுங்கா, அரவிந்த டிசில்வா ஆகியோர் ஓய்வு பெற்ற போது, அவர்களின் இடத்தை நிரப்ப முடியாமல் தத்தளிப்பு ஏற்பட்டது. அந்த தத்தளிப்பின் போது, சுமார் 6 மாதங்கள் இலங்கை அணி பல தோல்விகளை சந்தித்தது.
அதேபோல வேகப்பந்துவீச்சாளர் சுமிந்தா வாஸ் மற்றும் சுழல்பந்துவீச்சாளர் முரளிதரன் ஓய்வு பெற்ற போதும், இலங்கை அணி திணறியது. இந்த நிலையில் இலங்கை அணியில் ஜெயவர்த்தனே, தில்ஷன், சங்கக்காரா ஆகியோர் தற்போது சிறப்பாக ஆடி வருகின்றனர்.
ஆனால் இந்த 3 வீரர்களும் ஓய்வு பெறும் போது, சர்வதேச அளவில் வெற்றிகளை பெற இலங்கை அணி திணறும். எனவே எதிர்காலத்தில் ஏற்பட உள்ள இந்த பிரச்சனையை தடுக்க, இப்போதே இளம்வீரர்களை தயார்படுத்த வேண்டும்.
தற்போது இலங்கை அணி சில போட்டிகளில் தோல்வி அடைந்து வருவது உண்மை தான். ஆனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு பயிற்சியும், அனுபவமும் அளிக்க வேண்டியுள்ளது. அதற்காக தகுதியில்லாத சில வீரர்களை அணிக்கு தேர்வு செய்வதை ஏற்று கொள்ள முடியாது என்றார்.










