Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய அணியில் மீண்டும் இடம் பெற வாசிம் அக்ரம் அளித்த பயிற்சி உதவியது - பாலாஜி

Posted by:
Published: Saturday, September 8, 2012, 12:37 [IST]
 

இந்திய அணியில் மீண்டும் இடம் பெற வாசிம் அக்ரம் அளித்த பயிற்சி உதவியது - பாலாஜி
 

விசாகப்பட்டினம்: இந்திய அணியில் நான் மீண்டும் இடம்பெற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் வாசிம் அக்ரம் அளித்த பயிற்சி பெரும் உதவியாக இருந்தது என்று தமிழகத்தை சேர்ந்த இந்திய வேகபந்துவீச்சாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாலாஜி. இவர் காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். இந்த நிலையில் ஐபிஎல் 5 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய பாலாஜி 10 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த நிலையில் நியூசிலாந்திற்கு எதிரான 2 டுவென்டி20 போட்டிகள் மற்றும் டுவென்டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பாலாஜிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளரான வாசிம் அக்ரம் தனக்கு அளித்த பயிற்சி, மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப பெரும் உதவியாக இருந்ததாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

இந்திய அணியில் எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் நீண்டகாலமாக இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடவில்லை என்பது உண்மை தான். ஆனால் எனக்குள் கிரிக்கெட் உணர்வு இருந்து கொண்டே இருந்தது.

முதல்தரம் மற்றம் கிளப் தரம் போட்டிகளில் எனது முழுதிறனையும் வெளிப்படுத்தி ஆடினேன். இதன்மூலம் மீண்டும் இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு கிடைத்த இந்த நீண்ட இடைவெளிக்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நாட்டிற்காக விளையாடுவது என்பது ஒரு பெருமைக்குரிய காரியம். டுவென்டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி, கோப்பையை வென்று நாடு திரும்புவோம் என்று நம்புகிறேன்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய போது, பயிற்சியாளர் வாசிம் அக்ரம் பெரும் உதவியாக இருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அவருடன் கழித்த நாட்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்திய அணிக்கு திரும்ப வாசிம் அக்ரமின் பயிற்சி பெரும் உதவியாக இருந்தது.

எனது உடல்தகுதியை அதிகரிக்க கடினமாக உழைத்து வருகிறேன். தினமும் பந்துவீ்ச்சு பயிற்சியில் ஈடுபடுகிறேன். போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளேன். முன்னதாக இலங்கையில் பங்கேற்ற போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக ஆடியுள்ளது. எனவே இலங்கையில் உலக கோப்பையை வென்று நாடு திரும்புவோம் என்று நம்புகிறேன்.

புற்றுநோயில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ள யுவராஜ் சிங் மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ள ஹர்பஜன் சிங் ஆகியோருடன் விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

டிராவிட், லட்சுமண் ஆகியோர் இந்திய அணியின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தவர்கள். அவர்களின் இடத்தை இந்திய அணியில் நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. தற்போது சிறப்பாக ஆடிவரும் விராத் கோஹ்லி, தொடர்ந்து சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன்.

English summary
Indian pacer Laxmipathy Balaji said that, Wasim bhai has been a big asset during the IPL. Everybody knows what he is capable of. Spending last two years with him really helped a lot and helped to comeback.
கருத்தை எழுதுங்கள்