Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்த விதித்த தடை ரத்து- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

Posted by:
Updated: Monday, September 10, 2012, 17:16 [IST]
 

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்த விதித்த தடை ரத்து- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
 

சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகளை நடத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்திருந்த தடை உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் கே.எஸ்.விஸ்வநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,

எங்கள் அலுவலகத்துக்கு பேக்ஸ் மூலம் உத்தரவு ஒன்றை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுப்புற சூழல் பொறியாளர் அனுப்பினார். அதில் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வேறு விளையாட்டுகளை நடத்த தடை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சேப்பாக்கத்தில் உள்ள இந்த கிரிக்கெட் மைதானம் கடந்த 1972ம் ஆண்டு கட்டப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) விதிமுறைகளின் அடிப்படையில் பல்வேறு நவீன அம்சங்களை கிரிக்கெட் மைதானத்தில் கொண்டு வருவது அவசியம்.

எனவே மைதானத்தை ஒவ்வொரு பகுதியாக இடித்துவிட்டு, புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இடிப்பதற்கான ஒப்புதலை கடந்த 7.9.2009 அன்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ.) பெற்றோம்.

பார்வையாளர் உட்காரும் 6 ஸ்டாண்டுகளுக்கான திட்ட அனுமதிக்காக கடந்த 24.9.2009 அன்று சி.எம்.டி.ஏ.விடம் விண்ணப்பித்தோம். அதற்கான அனுமதி கடந்த 26.8.2010 அன்று பெறப்பட்டது. அடுத்த 3 ஸ்டாண்டுகளை இடிப்பதற்கான அனுமதி கடந்த 7.5.2010 அன்று கிடைத்தது.

கடைசி 3 ஸ்டாண்டுகளான ஐ.ஜே.கே கட்டுமானத்துக்கான திட்ட அனுமதி கேட்டு கடந்த 17.5.2010 அன்று விண்ணப்பித்தோம். 13 ஆயிரத்து 100 பேர் அமரக்கூடிய இந்த ஸ்டாண்டுகளின் கட்டுமானம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் அதற்கான மாசுகட்டுப்பாட்டு வாரிய சட்டத்தின்படி, காற்று மற்றும் நீர் மாசு தொடர்பான அனுமதியை பெற்று விட்டீர்களா? என்று கேட்டு அந்த வாரியத்தின் என்ஜினீயர் கடந்த 27.8.2012 அன்று விளக்க நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால் அதற்கு பதிலளிக்கவில்லை என்று நினைத்து அவசர அவசரமாக 4.9.2012 தேதியிட்ட தடை உத்தரவை எங்களுக்கு பேக்ஸ் மூலம் கடந்த 6ம் தேதி அனுப்பி உள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் கொடுத்த நோட்டீசுக்கு நாங்கள் விளக்கம் அனுப்பிவிட்டோம். ஆனால் அவசர அவசரமாக இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது சட்டவிரோதமானது. காற்று, நீர் மாசு தொடர்பான அனுமதிக்காக நாங்கள் விண்ணப்பித்து உள்ளோம்.

சேப்பாக்கம் மைதானத்தில் சர்வதேச டுவென்டி20 கிரிக்கெட் போட்டி வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. இந்தியா, நியுசிலாந்து அணிகள் அதில் பங்கேற்கின்றன. இதுதான் அங்கு நடத்தப்படும் முதல் சர்வதேச டுவென்டி20 போட்டியாகும்.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 5ம் தேதி முதல் துவங்கி ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் விளையாட்டுப் போட்டிக்கு தடை விதிப்பது அநீதியானது. எனவே அந்த உத்தரவுக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த தடை உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர், மாவட்ட பொறியாளர் ஆகியோர் 8 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Story first published:  Saturday, September 8, 2012, 10:59 [IST]
English summary
Pollution control board has order to ban matches in the Chennai Chepauk stadium. So Tamil Nadu cricket board has filed a petition against the ban order in Chennai high court. So Chennai high court has cancelled the order of pollution control board's ban order.
கருத்தை எழுதுங்கள்