Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஓய்வு பெறுவது குறித்து சச்சின் தான் முடிவு செய்யனும்- கபில்தேவ்

Posted by:
Published: Saturday, September 8, 2012, 11:47 [IST]
 

ஓய்வு பெறுவது குறித்து சச்சின் தான் முடிவு செய்யனும்- கபில்தேவ்
 

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் சச்சின் ஓய்வு பெறுவது குறித்து அவரே தான் முடிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன்களான அசாருதீனும், கபில்தேவும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஆனால் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சொற்ப ரன்களில் 3 முறை கிளீன் போல்டானார்.

இதில் அதிருப்தி அடைந்த முன்னாள் இந்திய வீரர்கள் பலரும், சச்சின் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் இதை பொருட்படுத்த சச்சின், தான் கிரிக்கெட் போட்டிகளில் ரசித்து ஆடி வருவதால், இப்போதைக்கு ஓய்வை அறிவிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்தியா உலக கோப்பையை வென்ற போதே, சச்சின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம் என்று கபில்தேவ் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது சச்சினுக்கு ஆதரவாக, ஓய்வு பெறுவது குறித்து சச்சின் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார். அதே கருத்தை முன்னாள் இந்திய கேப்டன் அசாருதீனும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கபில்தேவ் கூறியதாவது:

இந்தியா 2வது முறையாக உலக கோப்பையை வென்ற போதே சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் தற்போது அவருக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன். நாம் விரும்பி விளையாடும் ஒரு போட்டியில் இருந்து வெளியேறுவது அவ்வளவு எளிதல்ல. எனக்கும் அது கஷ்டமாக தான் இருந்தது. கடந்த 23 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வரும் சச்சின் ஓய்வு பெறுவதை குறித்து கருத்து தெரிவிப்பது தவறு என்று நினைக்கிறேன்.

இது குறித்து அசாருதீன் கூறுகையில், "சமீபகாலமாக சச்சினின் ஆட்டம் மந்தமாக உள்ளதை பார்க்க முடிகிறது. ஒரு வீரரின் வயது மற்றும் மனஅழுத்தம் மூலம் இது போன்ற நிலை ஏற்படலாம். கடந்த 23 ஆண்டுகளாக அவர், இந்திய அணிக்காக ஆடி வருகிறார்.

தற்போது சிறப்பாக விளையாடி வரும் விராத் கோஹ்லியை, அனைவரும் புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால் சச்சின் 3 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதை நினைக்க வேண்டும். எனவே அவருக்கு தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்திய அணியி்ல் இருந்து சச்சின் ஓய்வு பெறும் போது, மகிழ்ச்சியுடன் ஓய்வு பெற வேண்டும். எனவே ஓய்வு பெறுவதை குறித்து சச்சின் தான் முடிவு செய்ய வேண்டும்.

டுவென்டி20 போட்டிகள் அதிக விறுவிறுப்பை கொண்டது. ஆனால் டெஸ்ட் போட்டிகளை விட சிறந்தது எதுவுமில்லை. டுவென்டி20 போட்டிகளில் சிக்ஸ், பவுண்டரிகள் அடிப்பதை பார்க்க நன்றாக இருந்தாலும், ஆபத்தானது. ஒரு கிரிக்கெட் வீரரின் திறமை, டெஸ்ட் போட்டிகளில் தான் தெரியும். எனவே சர்வதேச கிரிக்கெட் வாரியமும், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும், டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்," என்றார்.

English summary
Former Indian captains Kapil Dev and Mohammed Azharuddin backed Sachin Tendulkar, who is under pressure to call time on his illustrious career, saying that he should decide when he wants to retire.
கருத்தை எழுதுங்கள்