Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நியூசிலாந்திற்கு எதிரான முதல் டுவென்டி20 போட்டி: இன்று களமிறங்கும் யுவராஜ் சிங் அசத்துவாரா?

Posted by:
Updated: Saturday, September 8, 2012, 13:11 [IST]
 

விசாகப்பட்டனம்: நியூசிலாந்திற்கு எதிரான முதல் டுவென்டி20 போட்டியில் புற்றுநோயில் இருந்து மீண்டுவந்துள்ள ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், இன்று இந்திய அணிக்காக களமிறங்குகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்காக ஆட உள்ள அவர், அணியின் வெற்றிக்கு உதவுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நியூசிலாந்திற்கு எதிரான முதல் டுவென்டி20 போட்டி: இன்று களமிறங்கும் யுவராஜ் சிங் அசத்துவாரா?
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி இங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் டுவென்டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை, இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டுவென்டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

இந்திய அணி:

கடந்த ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். ஆனால் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அவர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு, யுவராஜ் சிங் மீண்டும் இன்று தான் சர்வதேச போட்டியில் களமிறங்குகிறார். எனவே அவர் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது.

அதேபோல மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட அனுபவ சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு, இன்று மீண்டும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அதிரடி பேட்ஸ்மேன்கள் ஷேவாக், கம்பிர், சுரேஷ் ரெய்னா, கேப்டன் டோணி ஆகியோர் இந்திய அணியில் உள்ளனர்.

பந்துவீச்சை பொறுத்த வரை நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக வீரர் பாலாஜி, இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் ஜாகிர்கான், டின்டா, அஸ்வின், இர்பான் பதான் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணி:

ஏற்கனவே இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், டுவென்டி20 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் நியூசிலாந்து அணி இன்று களமிறங்க உள்ளது. நியூசிலாந்து அணியில் மெக்கல்லம், கேப்டன் ரோஸ் டெய்லர், நிகோல், வில்லியம்சன் ஆகியோர் பேட்டிங்கில் ரன் குவிக்க வாய்ப்புள்ளது.

பந்துவீச்சை பொறுத்த வரை பிரேஸ்வெல், டிம் சவுத்தீ ஆகியோர் சிறப்பாக செயல்படலாம். அதேபோல டெஸ்ட் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அனுபவ சுழல்பந்துவீச்சாளர் டேனியல் வெட்டோரி, அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

மழை வருமா?

விசாகப்பட்டினத்தில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் இரு அணிகளின் வீரர்களும் சரியாக பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. இந்த நிலையில் இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்ய 40 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இலங்கையில் இந்த மாதம் டுவென்டி20 உலக கோப்பை தொடர் துவங்க உள்ளது. இதற்கு முன்னதாக வரும் நியூசிலாந்திற்கு எதிரான 2 டுவென்டி20 போட்டிகள், இந்திய அணிக்கு பயிற்சி போட்டிகளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சொந்த மண்ணில் களமிறங்கும் இந்திய அணி இன்று வெற்றி பெற முயற்சி செய்யும் என்று தெரிகிறது.

Story first published:  Saturday, September 8, 2012, 13:10 [IST]
English summary
India will welcome back Yuvraj Singh and Harbhajan Singh as they face New Zealand in the first of the two-match Twenty20 International series on Saturday night.
கருத்தை எழுதுங்கள்