Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய அணிக்காக ஆட மீண்டும் ஆடுகளத்திற்குள் களமிறங்கிய போது அழுதுவிட்டேன்: யுவராஜ் சிங்

Posted by:
Published: Wednesday, September 12, 2012, 13:11 [IST]
 

இந்திய அணிக்காக ஆட மீண்டும் ஆடுகளத்திற்குள் களமிறங்கிய போது அழுதுவிட்டேன்: யுவராஜ் சிங்
 

சென்னை: நுரையீரல் புற்றுநோயில் இருந்து குணமாகி கடந்த 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கிய யுவராஜ் சிங், நேற்று ஆடுகளத்தில் பீல்டிங் செய்த போது அழுதுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்(30). கடந்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர்களில் ஒருவர். தனது சிறப்பான ஆட்டம் மூலம் உலக கோப்பை தொடரில், தொடர் நாயகன் விருதை பெற்றார்.

ஆனால் அதன்பிறகு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங்கிற்கு, மருத்துவ பரிசோதனையில் நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற அவர், குணமடைந்து நாடு திரும்பினார். அதன்பிறகு மீண்டும் இந்திய அணியி்ல் இடம் பெறுவதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நியூசிலாந்திற்கு எதிரான 2 டுவென்டி20 போட்டிகள் மற்றும் டுவென்டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. நியூசிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கு இடையிலான 2வது டுவென்டி20 போட்டி சென்னையில் நடைபெற்றது.

போட்டியின் டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்தது இந்திய அணி. கடந்த 10 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய யுவராஜ் சிங் 2 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்தார். பந்துவீச்சின் மூலம் விக்கெட் எதுவும் எடுக்கவிட்டாலும், பீல்டிங்கில் ஒரு கேட்ச் பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் ஒரு கேட்ச் பிடிக்க முயன்ற போது கையில் காயமடைந்து ஓய்வு எடுத்து கொண்டார்.

அதன்பிறகு பேட்டிங் செய்ய வந்த யுவராஜ் சிங், துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார். 26 பந்துகளில் 2 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்த அவர், ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினார். ஆனால் வெற்றிக்காக திணறிய இந்திய அணிக்கு பவுண்டரி அடித்து உதவ முயன்ற யுவராஜ் சிங் 34 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார்.

இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்காக பீல்டிங் செய்த போது, ஆடுகளத்தில் தனக்கு கண்ணீர் வந்துவிட்டதாக யுவராஜ் சிங் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இந்திய அணிக்காக பீல்டிங் செய்ய களத்தில் இறங்கிய முதல் ஓவரிலேயே எனது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. ஆனால் நான் எந்த கேமராவிலும் சிக்கவில்லை. இந்திய அணிக்காக மீண்டும் விளையாட நான் கடந்த வந்து பாதைகளை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

யுவராஜ் சிங் வழக்கம் போல நேற்று 12ம் நம்பர் டி-சர்ட்டை அணிந்து களமிறங்கினார். இது அவருக்கு அதிஷ்டமான எண் என்று கூறப்படுகிறது.

English summary
Yuvraj Singh, who played a vital role in India's World Cup 2011 triumph, made a comeback to the national side after battling cancer, revealed that he had tears in his eyes while he was on the field during the second T20 between India and New Zealand at M A Chidambaram Stadium in Chennai.
கருத்தை எழுதுங்கள்