Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் தொடருக்காக இலங்கை- மேற்கிந்திய தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர் ரத்து

Posted by:
Published: Thursday, September 13, 2012, 10:57 [IST]
 

ஐபிஎல் தொடருக்காக இலங்கை- மேற்கிந்திய தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர் ரத்து
 

டெல்லி: பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகளை சேர்ந்த வீரர்கள் முழுமையாக பங்கேற்கும் வகையில், இரு அணிகளுக்கும் இடையே நடைபெற திட்டமிடப்பட்டிருந்த டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக முத்தரப்பு ஒருநாள் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரபலமானது ஐபிஎல் தொடர். இந்தியாவை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு அணிகளை சேர்ந்த பல முன்னணி வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்காக விளையாடுகின்றனர். இதனால் இந்தியாவில் மட்டுமின்றி, உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரை விரும்புகின்றனர்.

மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு, அதிக அளவு சம்பளம் அளிக்கப்படுவதால், அதில் கவரப்படும் வெளிநாட்டு வீரர்கள் அதில் விளையாட விரும்புகின்றனர். ஆனால் ஐபிஎல் தொடரின் போது, மற்ற நாட்டு அணிகளுக்கு போட்டிகள் நடைபெறுவதால், வெளிநாட்டு வீரர்களால் போட்டிகளில் முழுமையாக பங்கேற்க முடிவதில்லை.

இதையடுத்து ஐபிஎல் தொடரை, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்(ஐசிசி) போட்டிகள் அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு ஐசிசி மறுத்துவிட்டது. இந்த நிலையில் பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வகையில், அடுத்த ஆண்டு இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த டெஸ்ட் தொடர் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அப்போது 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டுவென்டி20 போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்க திட்டமிட்டிருந்தது. ஆனால் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் போது தான் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இதனால் ஐபிஎல் தெடாரில் பங்கேற்கும் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள், டெஸ்ட் தொடரை ரத்து செய்ய கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளின் கிரிக்கெட் வாரியங்கள் இது குறித்து ஆலோசித்து, இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை கைவிட முடிவு செய்துள்ளது. இதற்கு பதிலாக இந்திய அணியையும் சேர்த்து முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி அஜித் ஜெயசேகரா கூறியதாவது,

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் தரப்பில் டெஸ்ட் தொடரை ரத்து செய்யலாம் என்ற ஆலோசனையை முன்வைக்கப்பட்டது. எனவே இலங்கை கிரிக்கெட் வாரியம் அதற்கு ஒப்பு கொண்டது என்றார்.

இது குறித்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரிய தொலைத்தொடர்பு மேலாளர் இம்ரான் கான் கூறியதாவது,

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் தொடர் நடத்தப்படும் தேதி மற்றும் மற்ற விவரங்கள் குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது என்றார்.

English summary
Sri Lanka’s two-match Test tour of the West Indies next May has been scrapped to play instead an ODI tri-series involving India, according to a report. With the scrapping of the Test series, players from both the countries will now be available for the IPL next year, the report also said.
கருத்தை எழுதுங்கள்