Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பையை மேற்கிந்திய தீவுகள் அணி வெல்லும்: கிறிஸ்கெய்ல் நம்பிக்கை

Posted by:
Published: Thursday, September 13, 2012, 13:03 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பையை மேற்கிந்திய தீவுகள் அணி வெல்லும்: கிறிஸ்கெய்ல் நம்பிக்கை
 

கொழும்பு: இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி உலக கோப்பையை கைப்பற்றும் திறமை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு உள்ளதாக அந்நாட்டு அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வரும் 18ம் தேதி முதல் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த 11ம் தேதி விமானம் மூலம் இலங்கைக்கு வந்து சேர்ந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடிப்பதில் திறமை மிகுந்தவர். சர்வதேச அளவில் இதுவரை 23 டுவென்டி20 போட்டிகளில் ஆடியுள்ள கெய்ல் மொத்தம் 757 ரன்களை எடுத்துள்ளார். டுவென்டி20 போட்டிகளில் சதமடித்த ஒரே மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் தான்.

இந்த நிலையில் டுவென்டி20 உலக கோப்பையை வெல்லும் திறமை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இருப்பதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

டுவென்டி20 உலக கோப்பை தொடர் அதிரடி ஆட்டத்துடன் காணப்படும். இப்போதே ரசிகர்கள் இடையே போட்டிகளை காண ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சொந்த மண்ணில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள நாங்கள், இலங்கையில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் மாற வேண்டியுள்ளது. உலக கோப்பை தொடரின் துவக்கம் முதலே சிறப்பாக ஆடி, மற்ற அணிகளுக்கு அழுத்தம் அளிக்க விரும்புகிறோம்.

மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்த வரை பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சமநிலையில் உள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு சொந்த மண்ணில் களமிறங்கிய எங்களால் சிறப்பாக ஆட முடியவில்லை. எனவே இந்த ஆண்டு நாங்கள் ஒரே அணியாக செயல்பட்டு வெற்றிகளை பெற திட்டமிட்டுள்ளோம்.

உலக கோப்பை தொடர் எப்போது துவங்கும் என்று எதிர்நோக்கி உள்ளேன். தொடரில் கலந்து உள்ள அணிகள் இடையே வெற்றி பெற கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகம் இல்லை. சிறப்பாக விளையாடும் எந்த அணியும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக ஆடி கோப்பையை கைப்பற்றும் என்று நம்புகிறேன். இதற்காக துவக்கம் முதலே சிறப்பாக ஆடி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற திட்டமிட்டுள்ளோம் என்றார்.

English summary
West Indies blaster batsman Chris Gayle said that, His team has the capacity to win the T20 world cup held in Srilanka.
கருத்தை எழுதுங்கள்