Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

'கிரிக்கெட் உலகின் கோஹினூர்' சச்சின்: முன்னாள் பாக். வீரர் பாராட்டு

Posted by:
Published: Friday, September 14, 2012, 14:24 [IST]
 

{image-14-sachin-55.jpg tamil.thatscricket.com} டெல்லி: இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 'கிரிக்கெட் உலகின் கோஹினூர்'. எனவே அவரது ஓய்வை குறித்து அவரே தான் முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(39). கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணியில் ஆடி வரும் இவர், அதிக போட்டிகளில் பங்கேற்றவர், அதிக ரன்களை சேர்த்தவர், அதிக சதங்களை அடித்தவர், கிரிக்கெட் உலகில் 100 சதங்கள் அடித்தவர் உட்பட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

ஆனால் நீண்டகாலமாக சர்வதேச போட்டிகளில் ஆடிவரும் சச்சின் விரைவில் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்திற்கு பலம் சேர்க்கும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து எதிரான டெஸ்ட் போட்டிகளில் சச்சின் சொற்ப ரன்களில் அவுட்டானார்.

இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான், புகழின் உச்சியில் உள்ள போதே சச்சின் ஓய்வு பெறுவது நல்லது என்று ஆலோசனை வழங்கினார். ஆனால் கிரிக்கெட் உலகின் கோஹினூராக உள்ள சச்சின், ஓய்வு பெறுவது குறித்து, அவரே தான் முடிவு எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறுவது குறித்து இம்ரான் கான் தெரிவித்த கருத்தை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால் சச்சினை பொறுத்தவரை, இம்ரான் கானின் கருத்து ஏற்புடையது அல்ல. சச்சின் 'கிரிக்கெட் உலகின் கோஹினூர்'. எனவே தனது ஓய்வு முடிவை எடுக்க சச்சினுக்கு அதிகாரம் உண்டு.

கிரிக்கெட் விளையாட்டிற்கான சச்சினின் பங்களிப்பு மிக அதிகம். ஒரு தலைமுறையில் சச்சினை போன்ற திறமையான வீரர் ஒருமுறை தான் வர முடியும். தேசப்பற்று கொண்ட அவருக்கு, இனி இந்திய கிரிக்கெட் அணிக்காக தன்னால் விளையாட முடியாது என்ற எண்ணம் வரும் போது ஓய்வு பெறுவார்.

கிரிக்கெட் விளையாட்டின் மீதான சச்சினின் காதல், நாட்டிற்காக அவரது சமர்ப்பணம் ஆகியவற்றை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. கடந்த 23 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி பல சாதனைகளை படைத்தவர் சச்சின். இதை சச்சினை குறித்து விமர்சனம் செய்பவர்கள் மறக்க கூடாது.

சர்வதேச போட்டிகளில் 18 ஆண்டுகள் விளையாடியுள்ள எனக்கு, போட்டியில் ஏற்படும் மனஅழுத்தம் குறித்து நன்றாக தெரியும். சச்சினின் தோல்விகளை பார்த்துவிட்டு, மக்கள் தவறான முடிவுக்கு வந்துவிட கூடாது. எந்த கிரிக்கெட் வீரராலும், எல்லா இன்னிங்ஸிலும் சதமடிக்க முடியாது என்றார்.

English summary
Former Pakistan leg spinner Abdul Qadir is of the opinion that it should be left to Sachin to decide when he wants to retire from international cricket. Because Sachin is like the 'Kohinoor of World Cricket'.
கருத்தை எழுதுங்கள்