Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 போட்டி ரேங்கிங்: 3வது இடத்தில் சுரேஷ் ரெய்னா-யுவராஜ் சிங்கிற்கு 15வது இடம்

Posted by:
Published: Friday, September 14, 2012, 12:51 [IST]
 

டுவென்டி20 போட்டி ரேங்கிங்: 3வது இடத்தில் சுரேஷ் ரெய்னா-யுவராஜ் சிங்கிற்கு 15வது இடம்
 

துபாய்: டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா 3வது இடத்தில் தொடர்கிறார். கடந்த 10 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் ஆடிய யுவராஜ் சிங் 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களை தரவரிசைப்படுத்தி, சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) பட்டியல் வெளியிடுகிறது. வரும் 18ம் தேதி இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ள நிலையில் டுவென்டி20 போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

பேட்ஸ்மேன்கள்:

இந்தியாவிற்கு எதிரான டுவென்டி20 போட்டியில் அதிரடியாக ஆடி 55 பந்துகளில் 91 ரன்களை குவித்த நியூசிலாந்து வீரர் மெக்கல்லம், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். மேற்கிந்திய தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் 2வது இடத்தில் உள்ளார்.

இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 3வது இடத்தை தக்கவைத்துள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டாப்-10 பேர் பட்டியலில் இந்திய வீரராக சுரேஷ் ரெய்னா மட்டுமே உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக 15வது இடத்தில் யுவராஜ் சிங் இடம்பெற்றுள்ளார். நுரையீரல் புற்றுநோய் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய யுவராஜ் சிங், நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் 26 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார். 16வது இடத்தில் இந்திய துவக்க வீரர் கம்பிர் உள்ளார்.

பந்துவீச்சாளர்கள்:

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தின் கிராம் ஸ்வான் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன் போத்தா 3வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளரின் டாப் 20 பேரின் பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.

இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தரவரிசையில் 21வது இடத்தை பிடித்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் 30வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின், டுவென்டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 42வது இடத்தில் உள்ளார்.

ஆல் ரவுண்டர்கள்:

ஆல் ரவுண்டர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிதி 2வது இடத்திலும், முஹம்மது ஹபீஸ் 3வது இடத்திலும் உள்ளனர். வங்கதேசம் வீரர் சாகிப் அல் ஹசன் 9வது இடத்திற்கு சரிந்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் 6வது இடத்தில் உள்ளார். டாப் 10 பேர் அடங்கிய பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.

English summary
With a valiant knock on comeback, India's Yuvraj Singh re-entered the Top 20 of the ICC T20 rankings, as New Zealand's Brendon McCullum and Pakistan's Saeed Ajmal top the list according to an ICC media release.
கருத்தை எழுதுங்கள்