Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதில் என்ன தவறு?: பிசிசிஐ

Posted by:
Published: Saturday, September 15, 2012, 18:14 [IST]
 

 

பெங்களூர்: ஐபிஎல் குழுவில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது சரியான முடிவு தான் என்று இந்தியா கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் குழுவில் இருந்த ஹைதராபாத்தை அடிப்படையாக கொண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதனால் 5வது ஐபிஎல் தொடரில் பங்கேற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் வீரர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

வீரர்களின் சம்பள பாக்கியை செலுத்த பிசிசிஐ அளித்த காலகெடு நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், நேற்றிரவு ஐபிஎல் குழுவில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசன் அறிவித்தார்.

இந்த நிலையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கை சரியானதே என்று பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, ஐபிஎல் ஆட்சிக்குழுவின் அவசர கூட்டத்தை நேற்று பிசிசிஐ கூட்டியது. இதற்கு முன்னதாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதை தவிர்க்க, பிசிசிஐ தரப்பில் அணியை விற்பனை செய்ய ஏலம் நடத்தப்பட்டது. வெளிப்படையாக நடைபெற்ற இந்த ஏலத்தில், மும்பை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த ஒருவர் நடக்கும் காரியங்களை அறிந்து கொள்ள கலந்து கொண்டார்.

ஆனால் டெக்கான் கிரோனிக்கல் ஹோல்டிங்ஸ் லிமிடேட் நிறுவனம், ஏலத்தில் அறிவிக்கப்பட்ட தொகையை ஏற்க மறுத்து ஏலத்தை ரத்து செய்தது. வீரர்களுக்கான சம்பள பாக்கியை செலுத்துவது குறித்து கடந்த மே மாதம் முதல் டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகம், பிசிசிஐக்கு அளித்த உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில் வீரர்களுக்கு சம்பளம் அளிக்க காலகெடுவை இன்னும் நீட்டிக்க முடியாத நிலை ஐபிஎல் நிர்வாக குழுவிற்கு ஏற்பட்டது. மேலும் அப்படி நீட்டிக்கப்பட்டால், அணியில் உள்ள வீரர்கள் இடையே அதிருப்தி ஏற்படலாம். இதனால் ஐபிஎல் குழுவில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியை மேற்கொண்டு பராமரிக்க முடியாத நிலையில் தான், அந்த அணியின் ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிசிசிஐயின் ரத்து முடிவிற்கு மும்பை உயர்நீதிமன்றம் தற்கால தடை விதித்து உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை மறுத்த பிசிசிஐ செயலாளர் சஞ்சய் ஜக்தலே, மும்பை உயர்நீதிமன்றத்தில் பிசிசிஐயின் ரத்து நடவடிக்கைக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

இன்று காலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் இது குறித்த விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிசிசிஐயின் ரத்து முடிவிற்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது குறித்த விசாரணையை வரும் 17ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர். என்றார்.

English summary
The Board of Control for Cricket in India (BCCI) has justified its decision to terminate Deccan Chargers contract on Friday night.
கருத்தை எழுதுங்கள்