Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஹர்பஜன் சிங்கின் அனுபவம் இந்திய அணிக்கு உதவுமா? -பதிலளிக்கிறார் அஸ்வின்

Posted by:
Published: Saturday, September 15, 2012, 9:08 [IST]
 

ஹர்பஜன் சிங்கின் அனுபவம் இந்திய அணிக்கு உதவுமா? -பதிலளிக்கிறார் அஸ்வின்
 

கொழும்பு: இலங்கை டுவென்டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருப்பது, அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்று தமிழக சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இலங்கை டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 18ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இலங்கையில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்தியா அணி, நாளை இலங்கைக்கு எதிரான பயிற்சி போட்டியில் களமிறங்க உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்க உள்ள ஹர்பஜன் சிங்கின் அனுபவ ஆட்டம், அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்று இந்திய இளம் சுழல்பந்துவீசசாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இந்திய அணியில் பல மாற்றங்களை செய்யும் வகையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு(2011) நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இந்திய அணியும் இதேபோல தான் இருந்தது. அணியில் உள்ள வீரர்களை மாற்றம் செய்யும் வகையில் இருந்தால், தொடரின் முக்கிய போட்டிகளில் இந்திய அணியின் முழு திறமையை ஒன்று சேர்த்து வெளிப்படுத்த முடியும்.

உலக கோப்பை தொடரின் சூப்பர் சிக்ஸ் அல்லது அரையிறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் போன்ற பலமான அணியை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது இந்திய அணி முழு பலத்துடன் களமிறக்க வேண்டிய நிலை உருவாகும்.

ஹர்பஜன் சிங் போன்ற வீரர்களின் அனுபவ ஆட்டம் அணிக்கு பக்கபலமாக இருந்து உதவும். என்னை பொறுத்த வரை ஹர்பஜன் சிங், ஒரு ஹீரோவாக அணியில் வலம் வந்தவர். அவருடன் ஒரு அணியில் ஆடுவதன் மூலம் அவரது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஹர்பஜன் சிங்கும் ஒருவர். எனவே இந்த உலக கோப்பை தொடரிலும் ஹர்பஜன் சிங்கின் அனுபவ ஆட்டம், அணிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

English summary
India's Ashwin felt that veteran Harbhajan Singh's experience would benefit the team as they will have more options in the playing XI.
கருத்தை எழுதுங்கள்