Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை பயிற்சி போட்டி: பதானின் அபார பந்துவீச்சில் இந்தியா வெற்றி

Posted by:
Published: Saturday, September 15, 2012, 14:50 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை பயிற்சி போட்டி: பதானின் அபார பந்துவீச்சில் இந்தியா வெற்றி
 

கொழும்பு: இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி போட்டியில் ஆடிய இந்திய அணி 26 ரன்களில் இலங்கை அணியை வீழ்த்தியது. இர்பான் பதான் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

இலங்கையில் வரும் 18ம் தேதி முதல் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் லீக் போட்டிகளுக்கு முன்னதாக தற்போது பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு மோசமான துவக்கம் கிடைத்தது. துவக்க வீரர் கம்பிர் 5 ரன்கள் எடுத்த நிலையில் மலிங்கா வீசிய பந்தில் மணிக்கட்டில் காயமடைந்தார். இதனால் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் ஷேவாக்(12), சுரேஷ் ரெய்னா(12), விராத் கோஹ்லி(8), யுவராஜ் சிங்(11) என்று வரிசையாக விக்கெட்கள் சரிந்தன. 8.3 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 51 ரன்களை எடுத்திருந்தது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் டோணியும், ரோஹித் சர்மாவும் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

5 விக்கெட்டுக்கு 78 ரன்களை சேர்த்த நிலையில், ரோஹித் சர்மா 26 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரிகளை விளாசி 37 ரன்களை எடுத்து ஜெயவர்த்தனேயிடம் கேட்சானார். கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து அரைசதம் கடந்தார் டோணி. 42 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரிகளை அடித்த டோணி 55 ரன்களை குவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 146 ரன்களை எடுத்தது. இலங்கை அணியின் தரப்பில் குலசேகரா சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, துவக்க வீரர்கள் முனவீரா(3), தில்ஷன்(1) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த சங்கக்காரா பொறுப்பாக ஆடி 34 ரன்களை சேர்த்து அவுட்டானார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய 16 ரன்களை எடுத்து டோணியிடம் கேட்சானார்.

சற்றுநேரம் நிலைத்து ஆடிய திருமன்னே 24 ரன்களிலும், மென்டிஸ் 26 ரன்களில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் களமிறங்கிய குலசேகரா, மலிங்கா ஆகியோரும் அடுத்தடுத்து அவுட்டாக 19.3 ஓவர்களில் இலங்கை அணியின் பேட்டிங் முடிவுக்கு வந்தது.

19.3 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் இர்பான் பதான் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களையும், பாலாஜி 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். வரும் 17ம் தேதி இந்திய அணி அடுத்த பயிற்சி போட்டியில் பாகிஸ்தானுடன் மோத உள்ளது.

English summary
Irfan Pathan's five wicket haul floored Sri Lanka as India recorded a 26-run win in the first warm-up match played at P Sara Oval in Colombo on Saturday.
கருத்தை எழுதுங்கள்