Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அடடா இந்தியா தோத்துப் போச்சே...அக்மல் அதிரடியால் வெற்றியை தட்டி பறித்தது பாகிஸ்தான்!

Posted by:
Updated: Monday, September 17, 2012, 17:47 [IST]
 

அடடா இந்தியா தோத்துப் போச்சே...அக்மல் அதிரடியால் வெற்றியை தட்டி பறித்தது பாகிஸ்தான்!
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை தொடரின் இன்றைய பயிற்சி போட்டியில் இந்திய அணியின் இமாலய ஸ்கோரை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு மிடில் ஆடர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல் பக்கபலமாக செயல்பட்டார். கடைசி வரை களத்தில் நின்று 92 ரன்களை குவித்த கம்ரான் அக்மல், இந்திய அணியிடம் இருந்து வெற்றியை தட்டி பறித்தார்.

இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் துவங்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த நிலையில் லீக் போட்டிகளுக்கு முன்னதாக பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி தனது முதல் பயிற்சி போட்டியில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இன்று நடைபெற்ற 2வது பயிற்சி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்போட்டியின் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

துவக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ஷேவாக், கம்பிர் ஜோடி அதிரடியாக ஆடியது. ஆனால் கம்பிர் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்து போல்டானார். அவரை தொடர்ந்து ஷேவாக் 14 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 26 ரன்களை சேர்த்து அப்ரிதியிடம் கேட்சாகி வெளியேறினார்.

அதன்பிறகு விராத் கோஹ்லியும், ரோஹித் சர்மாவும் ஜோடி சேர்ந்து, பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் துவஷம் செய்தனர். 40 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரிகளை அடித்த ரோஹித் சர்மா அரைசதம் கடந்து, 56 ரன்களில் போல்டானார்.

ஆனால் அதிரடியை தொடர்ந்த கோஹ்லி 47 பந்துகளில் 2 சிக்ஸ், 7 பவுண்டரிகளுடன் 75 ரன்களை எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். யுவராஜ் சிங் 4 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்தியா 3 விக்கெட்களை இழந்து 183 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

184 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் துவக்கத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறியது. துவக்க வீரர் இம்ரான் நசீர் 13 ரன்கள் எடுத்து, சுரேஷ் ரெய்னாவிடம் கேட்சானார். நசீர் ஜம்ஷெத் டக் அவுட்டானார். துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் முஹம்மது ஹபீஸ் 29 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரிகளை அடித்து 38 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினின் சுழலில் சிக்கினார்.

அப்ரிதி டக் அவுட்டானார். உமர் அக்மல் 2 ரன்களில் திருப்திபட்டு கொண்டார். விக்கெட்கள் ஒருபுறம் சரிந்து கொண்டே இருந்தாலும், மற்றொருபுறம் கம்ரான் அக்மல் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். சிக்ஸர், பவுண்டரிகள் அடித்து தூள் கிளம்பிய கம்ரான் அக்மல் அரைசதம் கடந்த பிறகும், அதிரடியை தொடர்ந்தார். அவருக்கு கடைசி கட்டத்தில் சோயப் மாலிக் ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார்.

கடைசி ஓவருக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த நிலையில் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த கம்ரான் அக்மல் அணியின் வெற்றியை உதவி செய்தார். 50 பந்துகளில் 6 சிக்ஸ், 5 பவுண்டரிகளை அடித்து 92 ரன்களை குவித்த கம்ரான் அக்மல் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய சோயப் மாலிக் 18 பந்துகளில் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

Story first published:  Monday, September 17, 2012, 10:50 [IST]
English summary
India will play in a warm up match against Pakistan before the T20 world cup 2012. India win the first warm up match against Srilanka.
கருத்தை எழுதுங்கள்