Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை தொடரில் ஆட வாய்ப்பு இழந்த இந்திய வீரர்கள் யார்-யார்?

Posted by:
Published: Tuesday, September 18, 2012, 12:47 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை தொடரில் ஆட வாய்ப்பு இழந்த இந்திய வீரர்கள் யார்-யார்?
 

கொழும்பு: டுவென்டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடும் திறன் கொண்ட பல இந்திய வீரர்களுக்கும், இலங்கையில் இன்று துவங்கும் டுவென்டி20 உலக கோப்பை தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இலங்கையில் துவங்குகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றனர். டுவென்டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் டோணி, ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், சுரேஷ் ரெய்னா, கம்பிர், ஷேவாக் உட்பட பலரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் 10 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் தவித்த யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் டுவென்டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடும் திறன் கொண்ட சில இளம்வீரர்களுக்கு, இந்திய அணியி்ல் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதில் ராபின் உத்தப்பா, யூசுப் பதான், ஜடேஜா ஆகியோர் முக்கியமானவர்கள்.

ராபின் உத்தப்பா:

அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான இவர், கடந்த 2007ம் ஆண்டு டுவென்டி20 உலக கோப்பை தொடரில் கலந்து கொண்டார். மேலும் கடந்த மே மாதம் முடிவடைந்த ஐபிஎல் தொடரில், அதிரடியாக ஆடிய உத்தப்பா, டுவென்டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டுவென்டி20 போட்டியில் உத்தப்பா இடம் பெற்றார்.

இந்த நிலையில் புற்றுநோயில் பாதிக்கப்பட்டு, குணமடைந்த யுவராஜ் சிங், 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். இதனால் அதிரடி வீரர் உத்தப்பாவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

யூசுப் பதான்:

ஒரு காலத்தில் டுவென்டி20 போட்டிகளில் அதிரடி பேட்ஸ்மேனாக ஜொலித்த யூசுப் பதான், சமீபகாலமாக இந்திய அணியில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள தவறினார். மேலும் 5வது ஐபிஎல் தொடரிலும் இவரது ஆட்டம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இருக்கவில்லை. சுழல்பந்துவீச்சாளராக யூசுப் பதான், விக்கெட்களை வீழ்த்துவதில் தோல்வியுற்றார். இதனால் டுவென்டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யூசுப் பதானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரது சகோதரரும், வேகப்பந்துவீச்சாளருமான இர்பான் பதானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரவிந்திர ஜடேஜா:

சிறந்த ஆல் ரவுண்டரான ஜடேஜாவின் திறமையை நிரூபித்து காட்ட இந்திய அணியில் பல வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. ஆனால் யூசுப் பதானை போல அவரும், தனது வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவில்லை. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் களமிறங்கிய இவர் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சொதப்பினார். மேலும் சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

உமேஷ் யாதவ்:

இளம்வேகப்பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ்விற்கு, உலக கோப்பை தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக வேகபந்துவீச்சாளர் பாலாஜிக்கு, இந்திய அணியி்ல் வாய்ப்பு அளிக்கப்பட்டதால், உமேஷ் யாதவ்விற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

பிரக்யன் ஓஜா:

சுழல்பந்துவீச்சாளரான இவர், பேட்டிங்கில் அவ்வப்போது ஒத்துழைப்பு கொடுத்து ஆடும் திறமை கொண்டவர். ஆனால் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு, இந்திய அணியி்ல் வாய்ப்பு அளிக்கப்பட்டதால் ஓஜா வெளியேற்றப்பட்டார். மேலும் இலங்கை ஆடுகளங்களில் இடதுகை பந்துவீ்ச்சாளராக ஓஜா, சிறப்பாக செயல்பட முடியுமா என்ற சந்தேகம், தேர்வு குழுவினருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஹானே:

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹானே, கடந்த ஐபிஎல் தொடரில் 2 சதங்களை அடித்து தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார். இதனால் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனுபவ வீரர் ரோஹித் சர்மா, தனது திறமையை காட்ட மீண்டும் வாய்ப்பு வழங்கிய தேர்வு குழுவினர், ரஹானேக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

English summary
Indian cricket team selectors has not selected some players in India squad for T20 world cup. Robin Uthappa a hard hitter and wicket keeper was one among them.
கருத்தை எழுதுங்கள்