Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மென்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை-இலங்கை 82 ரன்களில் அபார வெற்றி

Posted by:
Updated: Wednesday, September 19, 2012, 18:44 [IST]
 

மென்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை-இலங்கை 82 ரன்களில் அபார வெற்றி
 

ஹம்பாந்தோட்டை: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய இலங்கை வீரர் அஜந்தா மென்டிஸ் 6 விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நேற்று துவங்கியது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், நேற்று முதல் லீக் போட்டி நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மோதின.

சொந்த மண்ணில் களமிறங்கிய இலங்கை அணிக்கு ரசிகர்களின் ஆதரவு பலமாக இருந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய இலங்கை அணி, துவக்க வீரர் முனவீராவின் விக்கெட்டை முதலில் இழந்தது. 17 ரன்கள் எடுத்த முனவீரா ரன் அவுட்டானார்.

அதிரடியாக ஆடி வந்த தில்ஷனும் 39 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஜெயவர்த்தனே 13 ரன்களில் ரன் அவுட்டானார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த சங்கக்காராவும், மென்டிஸூம் அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர்.

கடைசி ஓவர் வரை களத்தில் நின்ற சங்கக்காரா 26 பந்துகளில் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 44 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார். கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த ஜீவன் மென்டிஸ் 30 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 43 ரன்கள் சேர்த்தார். கடைசி 2 பந்துகளை எதிர்கொண்ட பெரேரா அதிரடியாக ஒரு சிக்ஸ் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்களை இழந்த இலங்கை அணி 182 ரன்களை குவித்தது. 183 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி துவக்கம் முதலே ரன் சேர்க்க தடுமாறியது.

நீண்ட இடைவெளிக்குப்பின் சர்வதேச போட்டிக்கு திரும்பிய அஜந்தா மென்டிஸ், முதல் ஓவரிலேயே அசத்தினார். முதலில் சிபாண்டாவை(11) வெளியேற்றிய இவர், அடுத்த பந்தில் கேப்டன் பிரண்டன் டெய்லரை டக் அவுட்டாக்கினார். சிறிது நேரத்தில் மசகட்சாவும்(20), மென்டிஸின் சுழலில் வீழ்ந்தார்.

அதன்பிறகு எர்வின்(10), வாலர்(0) இருவரும் ஜீவன் மென்டிஸின் சுழலில் சிக்கினர். மீண்டும் வந்த அஜந்தா மென்டிஸ் வந்து சிகும்புராவை(19) போல்டாக்கினார். பிறகு உட்செயா(1), ஜார்விசையும்(0) வெளியேற்றினார். கிரீமர் 17 ரன்கள் எடுத்தார். இதனால் 17.3 ஓவர்களின் முடிவில் ஜிம்பாப்வே அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்களை மட்டுமே எடுத்தது.

அஜந்தா மென்டிஸ் சிறப்பாக பந்துவீசி 8 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களையும், ஜீவன் மென்டிஸ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதன்மூலம் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டுவென்டி20 உலக கோப்பை தொடர்களில் 8 ரன்களை கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்திய அஜந்தா மென்டிஸ் புதிய சாதனையை படைத்தார்.

Story first published:  Wednesday, September 19, 2012, 10:08 [IST]
English summary
It was Mendis duo's magic that crushed Zimbabwe in the opening match of the ICC World Twenty20 2012 here on Tuesday night. Ajantha Mendis (record haul of 6/8) and Jeevan Mendis shared nine wickets between them to give Sri Lanka a huge 82-run victory at the Mahinda Rajapaksa International Cricket Stadium. Zimbabwe were spun out for 100 in 17.3 overs, in pursuit of 183.
கருத்தை எழுதுங்கள்