Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பையில் சவாலான அணி எது?: மனம் திறக்கிறார் கிறிஸ் கெய்ல்

Posted by:
Updated: Wednesday, September 19, 2012, 12:02 [IST]
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களுக்கு எதிரான சவால் மிகுந்த அணியாக ஆஸ்திரேலியா அணி தான் இருக்கும் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

டுவென்டி20 உலக கோப்பையில் சவாலான அணி எது?: மனம் திறக்கிறார் கிறிஸ் கெய்ல்
டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முதல் இலங்கையில் துவங்கியது. இதில் பங்கேற்கும் 12 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளன. இதில் பி பிரிவில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு பலமான அணிகள் உள்ள நிலையில், அயர்லாந்து லீக் சுற்றுடன் வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிக சவாலாக இருக்க போகும் அணி ஆஸ்திரேலியா தான் என்று மேற்கிந்திய தீவுகள் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

டுவென்டி20 உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சவால் மிகுந்த அணியாக ஆஸ்திரேலியா தான் இருக்கும். ஆஸ்திரேலியா அணியை வென்று அடுத்த சுற்றிற்கு முன்னேறிவிட்டால், எங்கள் அணியின் நிலவரம் எப்படி உள்ளது என்பது தெரிந்துவிடும். மேலும் அனுபவம் மிகுந்த பலமான அணிகளை வீழ்த்தியுள்ள அயர்லாந்து அணியை சாதாரணமாக கணக்கிட முடியாது.

துணை கண்டத்தை சேர்ந்த அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினம். எனவே ஒவ்வொரு அணிக்கும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது. ஆனால் நாங்கள் வகுத்துள்ள திட்டத்தின்படி, வெற்றிகளை பெற்றால் இறுதிப்போட்டிக்கு மேற்கிந்திய தீவுகள் முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். இதனால் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் 122 ரன்களில் சுருண்டது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியில் பேட்டிங் பார்டனர்ஷிப்பை இன்னும் பலப்படுத்த வேண்டியுள்ளது என்றார்.

டுவென்டி20 உலக கோப்பை தொடரில் வரும் 22ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் களமிறங்க உள்ளது.

Story first published:  Wednesday, September 19, 2012, 12:01 [IST]
English summary
Hard hitting West Indian batsman Chris Gayle has said that the main challenge for his side in the T20 World Cup will be the Australians.
கருத்தை எழுதுங்கள்