Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

20-0 உலக கோப்பை: 'ஆல் ரவுண்டர்' வாட்சன் அதிரடி-ஆஸ்திரேலியாவுக்கு அபார வெற்றி

Posted by:
Updated: Thursday, September 20, 2012, 19:23 [IST]
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அயர்லாந்திற்கு எதிரான லீக் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அதிரடியாக ஆடிய ஷேன் வாட்சன், ஆஸ்திரேலியாவுக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று தந்தார்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சி பிரிவை சேர்ந்த ஆஸ்திரேலியா, அயர்லாந்து அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

20-0 உலக கோப்பை: 'ஆல் ரவுண்டர்' வாட்சன் அதிரடி-ஆஸ்திரேலியாவுக்கு அபார வெற்றி

ஆனால் ஆட்டத்தில் வாட்சன் வீசிய முதல் பந்தை சந்தித்த அயர்லாந்து துவக்க வீரர் வில்லியம் போர்ட்டர்பீல்டு டக் அவுட்டானார். இன்னொரு துவக்க வீரர் பால் ஸ்டிர்லிங் 7 ரன்களில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்தார். அதன்பிறகு வந்த எட் ஜாய்ஸ் 3 பவுண்டரிகள் அடித்து 16 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். கேரி வில்சன் 5 ரன்களில் ஏமாற்றினார்.

அணியின் பரிதாப நிலையை உணர்ந்த நியல் ஓ பிரையன் மற்றும் அவரது சகோதரர் கெவின் ஓ பிரையன் சேர்ந்து பொறுப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் நியால் 20 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார். அதிரடியாக ஆடி வந்த கெவின் ஓ பிரையன் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து வாட்சனின் பந்தில் ஆட்டமிழந்தார். ஜான்ஸ்டன் 7 ரன்களில் வெளியேற, கடைசிக் கட்டத்தில் அலெக்ஸ் குசாக், நிஜில் ஜோன்ஸ் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட்களை இழந்து 123 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஷேன் வாட்சன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

124 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன், டேவிட் வார்னர் ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது. டேவிட் வார்னர் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்து அவுட்டானார்.

ஆனால் வாட்சன் தொடர்ந்து வாணவேடிக்கை காட்டினார். 30 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்த வாட்சன் அரைசதம் கடந்தார். ஆனால் 51 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். மைக்கேல் ஹஸ்ஸி 10 ரன்களில் எல்.பி.டபில்யூனார்.

அதன்பிறகு வந்த கேமரூன் ஓயிட், ஜார்ஜ் பெய்லி ஜோடி பொறுமையாக ஆடி 15.1 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஓயிட்(22), பெய்லி(6) ஆகிய இருவரும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். போட்டியில் 3 விக்கெட்கள் மற்றும் அரைசதம் கடந்த ஷேன் வாட்சன் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

Story first published:  Thursday, September 20, 2012, 13:21 [IST]
English summary
Shane Watson's fine all-round performances (3/26 and 51) powered Australia to a commanding 7 wicket victory over Ireland in a Group C match at the ICC World Twenty20 2012 on Wednesday night.
கருத்தை எழுதுங்கள்