Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை லீக்: கோஹ்லி, யுவராஜ் அபார ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி துவக்கம்

Posted by:
Published: Thursday, September 20, 2012, 13:04 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை லீக்: கோஹ்லி, யுவராஜ் அபார ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி துவக்கம்
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா களமிறங்கிய முதல் லீக் போட்டியி்ல ஆப்கானிஸ்தானை 23 ரன்களில் வீழ்த்தியது. இதன்மூலம் டுவென்டி20 உலக கோப்பை தொடரை இந்தியா வெற்றியுடன் துவக்கியுள்ளது. பேட்டிங்கில் விராத் கோஹ்லியும், பந்துவீச்சில் யுவராஜ் சிங்கும் நேற்று சிறப்பாக ஆடினர்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஏ பிரிவை சேர்ந்த இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து இமாலய ஸ்கோரை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா துவக்கத்திலேயே தடுமாறியது. 2வது ஓவரிலேயே துவக்கவீரர் கம்பிர் 10 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார். மற்றொரு துவக்க வீரர் ஷேவாக் 8 ரன்களில் திருப்திபட்டு கொண்டார். இதனால் 4.1 ஓவரில் இந்தியா 2 விக்கெட்களை இழந்து 22 ரன்களை மட்டுமே எடுத்து திணறியது.

அதன்பிறகு விராத் கோஹ்லியும், யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். விராத் கோஹ்லி அதிரடியாக ஆட யுவராஜ் சிங் பொறுமையாக ஆடினார். சிக்ஸ் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய யுவராஜ் சிங் 18 ரன்களில் கேட்சானார். அதன்பிறகு வந்த சுரேஷ் ரெய்னா அதிரடியில் மிரட்டினார்.

39 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸ், 4 பவுண்டரிகளை விளாசிய விராத் கோஹ்லி அரைசதம் கடந்து வெளியேறினார். சுரேஷ் ரெய்னா 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து போல்டானார். இறுதிக்கட்டத்தில் கேப்டன் டோணி அதிரடியாக 1 சிக்ஸ், 2 பவுண்டரிகளை அடித்து 18 ரன்களை குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 159 ரன்களை எடுத்தது.

160 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு, ஷாஜத், நவ்ரோஸ் ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது. 3 பவுண்டரிகளை விளாசி 18 ரன்களை எடுத்த ஷாஜத், யுவராஜ் சிங்கிடம் கேட்சாகி வெளியேறினார்.

நவ்ரோஸ் 1 சிக்ஸ் அடித்து மிரட்டிய நிலையில், யுவராஜ் சிங்கின் பந்தில் எல்.பி.டபில்யூ ஆனார். சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடிய கரிம் சாதிக் 26 ரன்களில் கம்பிரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அஸ்கர் 6 ரன்களில் ஏமாற்றினார். அதிரடி வீரர் முஹம்மது நபி வந்த வேகத்தில் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகளை விளாசி, இந்திய ரசிகர்களுக்கு திகிலை ஏற்படுத்தினார். ஆனால் 31 ரன்களை எடுத்த மஹம்மது நபி, அஸ்வினின் சுழலில் சிக்கினார்.

அதன்பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக 19.3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 136 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் டுவென்டி20 உலக கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் இந்தியா 23 ரன்களில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தரப்பில் பாலாஜி, யுவராஜ் சிங் ஆகியோர் 3 விக்கெட்களும், அஸ்வின் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். போட்டியில் அரைசதம் கடந்த இந்திய வீரர் விராத் கோஹ்லிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

English summary
Afghanistan kept fighting till the end before going down to India by 23 runs in their Group A match of ICC World Twenty20 2012 at the R Premadasa Stadium on Wednesday night.
கருத்தை எழுதுங்கள்