Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

லூக் ரைட் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி- லீக் சுற்றுடன் ஆப்கானிஸ்தான் 'அவுட்'

Posted by:
Published: Saturday, September 22, 2012, 13:06 [IST]
 

 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து வீரர் லூக் ரைட் அதிரடியாக ஆடி 99 ரன்களை குவித்தார். இதனால் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் திணறிய ஆப்கானிஸ்தான் அணி 116 ரன்களில் படுதோல்வி அடைந்து, தொடரை விட்டு வெளியேறியது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஏ பிரிவில் உள்ள இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஏற்கனவே இந்தியாவிற்கு எதிரான லீக் போட்டியில் தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான், நேற்று கட்டாய வெற்றியை முன்வைத்து களமிறங்கியது.

போட்டியின் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் கீஸ்வெட்டர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்ச, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க திணறினர்.

இந்த நிலையில் அணியின் பரிதாப போக்கை உணர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ், லூக் ரைட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். ஆனால் 5 பவுண்டரிகளை விளாசிய அலெக்ஸ் 31 ரன்களில் ரன் அவுட்டானார்.

அதிரடியை தொடர்ந்த லூக் ரைட், போட்டியின் 16வது ஓவரில் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடிக்க 22 ரன்களை எடுக்கப்பட்டது. இதன் இடையே 27 ரன்கள் எடுத்த மார்கன் அவுட்டானார். 19வது ஓவரில் அதிரடியை காட்டிய லூக் ரைட், ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் இங்கிலாந்து அணி 32 ரன்களை குவித்தது.

அதன்பிறகு வந்த பட்லர்(15), பெயர்ஸ்டோ(12) வந்த வேகத்தில் அதிரடியாக ஆடி பிரிவிலியன் திரும்பினர்.

இந்த நிலையில் கடைசி ஓவரில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரைட், கடைசி பந்தில் சதமடிக்க 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் 99 ரன்களுடன் கடைசி வரை லூக் ரைட் அவுட்டாகாமல் இருந்தார். 55 பந்துகளில் 6 சிக்ஸ், 8 பவுண்டரிகளை விளாசி லூக் ரைட் 99 ரன்களை சேர்த்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் துவக்கம் முதலே தடுமாறியது. மிடில் ஆடரில் குல்போதின் நைப் மட்டுமே பொறுப்பாக ஆடினார். 32 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து 44 ரன்களை சேர்த்த அவர் போல்டானார். மற்றப்படி அனைத்து ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர்.

இதனால் 17.2 ஓவர்களில் 80 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்தியாவுடனான முதல் லீக் போட்டியில் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான், லீக் போட்டிகளுடன் தொடரில் இருந்து வெளியேறியது. போட்டியில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த லூக் ரைட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

சூப்பர்-8ல் இந்தியா:

ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி 2 லீக் போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் அதே பிரிவில் உள்ள இந்தியா, இங்கிலாந்து அணிகள், சூப்பர் 8 சுற்றிற்கு எளிதாக முன்னேறின. இதனால் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் வெற்றி தோல்விகளால் எந்த அணிக்கும் பாதிப்பு ஏற்படாது.

English summary
Defending champions England crushed Afghanistan by 116 runs in their Group A match of the ICC World Twenty20 2012 at the R Premadasa Stadium on Friday night. Luke Wright was the star of the match. With this England and India have made it to Super Eight stage while winless Afghanistan go home.
கருத்தை எழுதுங்கள்