Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை: மெக்கல்லம் சதமடித்து சாதனை: நியூசிலாந்து அபார வெற்றி!

Posted by:
Published: Saturday, September 22, 2012, 11:14 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை: மெக்கல்லம் சதமடித்து சாதனை: நியூசிலாந்து அபார வெற்றி!
 

பல்லேகெலே: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில் அதிரடியாக ஆடி தனது 2வது சதமடித்து புதிய சாதனை படைத்த மெக்கல்லம், நியூசிலாந்து அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டி பிரிவை சேர்ந்த நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்கத்தில் ஏமாற்றம் ஏற்பட்டது. துவக்க வீரர் குப்தில் 11 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு மற்றொரு துவக்க வீரர் பிராங்க்ளின் உடன் ஜோடி சேர்ந்த மெக்கல்லம் அதிரடியாக ஆடினார். பிராங்க்ளின் மெதுவாக ஆடி 35 ரன்களை சேர்த்து அவுட்டானார்.

ஆனால் தொடர்ந்து அதிரடியாக ஆடிய மெக்கல்லம், போட்டியின் 19வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்து டுவென்டி20 போட்டிகளில் தனது 2வது சதமடித்தார். போட்டியின் கடைசி பந்தை சிக்ஸருக்கு விரட்ட நினைத்த மெக்கல்லம், கேட்சாகி வெளியேறினார். 58 பந்துகளில் 7 சிக்ஸ், 11 பவுண்டரிகள் அடித்த அவர், 123 ரன்களை குவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து 191 ரன்களை குவி்த்தது. கேப்டன் ரோஸ் டெய்லர் 14 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

192 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை விரட்டிய வங்கதேசம் அணி துவக்கம் முதலே ரன்களை சேர்க்க தடுமாறியது. துவக்க வீரர் தமிம் இக்பால் 3 பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகி ஏமாற்றினார். சாகிம் அல் ஹசன் 11 ரன்களில் திருப்திபட்டு கொண்டார். சற்றுநேரம் நிலைத்து ஆடிய முஹம்மது அஷ்ரபுல் 21 ரன்கள் எடுத்தார்.

மிடில் ஆடரில் நாசிர் ஹூசன் மட்டும் பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் 8 விக்கெட்களை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதன்மூலம் நியூசிலாந்து அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டியில் அதிரடியாக ஆடி சதமடித்த பிரண்டன் மெக்கல்லம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மெக்கல்லம் சாதனை:

டுவென்டி20 போட்டிகளில் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் 2வது சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் டுவென்டி20 போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் (123) எடுத்தவர்கள் பட்டியலில் மெக்கல்லம் முதலிடத்தை பிடித்தார்.

English summary
Brendon McCullum's magnificent ton followed by Kyle Mills' superb bowling performance ensured New Zealand start their World T20 campaign on a winning note, as they defeated Bangladesh by 59 runs in the fifth match of the tournament at Pallekele on Friday.
கருத்தை எழுதுங்கள்