Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழு பலத்துடன் ஆடுவேன்: இஷாந்த் சர்மா

Posted by:
Updated: Monday, September 24, 2012, 16:22 [IST]
 

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழு பலத்துடன் ஆடுவேன்: இஷாந்த் சர்மா
 

பெங்களூர்: வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடி, இந்திய அணிக்கு முழு பலத்துடன் திரும்ப உள்ளதாக, இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா. கடந்த மார்ச் மாதம் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய அவர், தற்போது குணமடைந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

தற்போது ராஜஸ்தான் அணிக்கு எதிரான இராணி கோப்பை தொடரில் ஆடி வரும் இஷாந்த் சர்மா, பெங்களூரில் 'தட்ஸ் கிரிக்கெட்' செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முழு பலத்துடன் ஆடி, இந்திய அணிக்கு திரும்ப உள்ளதாக தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி இதோ:

கேள்வி: கடந்த 8 மாதங்களுக்கு பிறகு முதல் தரம் கிரிக்கெட் போட்டிகளில் நீங்கள் பங்கேற்க உள்ளீர்கள். தற்போது முழு உடல்திறனுடன் உள்ளீர்களா? பந்துவீசுவதில் ஏதாவது சிரமம் உள்ளதா?

பதில்: தற்போது 100 சதவீதம் உடல்திறனுடன் உள்ளேன். என்னால் சரியான இடங்களில் பந்தை வீச முடிகிறது. மேலும் எனது தன்னம்பிக்கை அதிகரித்து, பந்துவீச தகுந்த உடல்வகு கிடைத்துள்ளது.

கேள்வி: காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போன போது ஏமாற்றம் அடைந்தீர்களா?

பதில்: இல்லை. எனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், நானாக தான் 8 மாதங்கள் ஓய்வெடுத்து கொண்டேன். எனவே இதில் ஏமாற்றம் அடைய எதுவும் இல்லை. அறுவை சிகிச்சை செய்ததால் தற்போது என்னால் முழுதிறனுடன் செயல்பட முடிகிறது. எனவே இதற்காக மகிழ்ச்சி தான் அடைகிறேன்.

கேள்வி: வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதன் மூலம், மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப திட்டமிட்டு உள்ளீர்களா?

பதில்: ஆமாம். அதற்காக தான் தற்போது தயாராகி வருகிறேன். இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுபலத்துடன் இந்திய அணிக்கு திரும்புவேன்.

கேள்வி: இந்திய ஆடுகளங்களில் வேகப்பந்துவீச்சாளாராக செயல்படுவது கஷ்டமா?

பதில்: இந்திய ஆடுகளங்களில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அப்படி கஷ்டம் ஒன்றும் இல்லை. அது நமது மனநிலையை பொறுத்தது. இந்திய ஆடுகளங்களில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு குறைவாக இருந்தால், யாரும் வேகப்பந்துவீச்சாளருக்கான பயிற்சியோ, ஊக்கமோ கொடுக்கமாட்டார்கள். எனவே வேகப்பந்துவீச்சாளராக மாறியது எனது துரதிஷ்டம் என்று கூற முடியாது. என்னை பொறுத்த வரை நாட்டின் வேகப்பந்துவீச்சாளராக செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி: அடுத்த ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் உள்ளது மேலும் அடுத்தடுத்து பல கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. எனவே ஓய்வின்றி பந்துவீசும் பணியில் ஈடுபட நீங்கள் தயாராக உள்ளீர்களா?

பதில்: வேலை பளு என்பது எப்போதுமே அதிகம் தான். இதை நீங்கள் எப்படி எடுத்து கொள்ளுகிறீர்கள் என்பது தான் முக்கியம். அதை நினைத்து வருத்தப்படாமல், அது நமது வளர்ச்சிக்கான வழி என்று எடுத்து கொள்ள வேண்டும்.

கேள்வி: இந்திய அணியில் தற்போது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதை குறித்து...?

பதில்: அணியில் பந்துவீச்சு மட்டுமல்ல, பேட்டிங்கிலும் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது தான்.

கேள்வி: இந்திய அணியின் அனுபவ வீரர்களாக இருந்த ராகுல் டிராவிட், லட்சுமண் ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், வெளிநாடுகளில் பங்கேற்கும் போட்டிகளில் இந்தியா திணறும் என்று கருதுகிறீர்களா?

பதில்: முதலில் உள்நாட்டில் நடைபெற உள்ள போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெற வேண்டும். சொந்த மண்ணில் நம்மை வெளிநாட்டு அணிகள் வீழ்த்தட்டும், அப்புறம் வெளிநாட்டு போட்டிகளை குறித்து யோசிக்கலாம். தற்போது அது குறித்து கருத்து தெரிவிப்பது முறையல்ல.

கேள்வி: இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜோய் டேவ்ஸ் குறித்து..?

பதில்: அவருடன் ஒரே ஒரு தொடரில் மட்டுமே இணைந்து பணியாற்ற முடிந்தது. அவரது அறிவுறுத்தலின் பேரில், எனது பந்துவீச்சில் சிறிய அளவிலான மாற்றங்களை செய்துள்ளேன். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து செயலாற்றி, எனது பந்துவீச்சை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறேன் என்றார்.

Story first published:  Monday, September 24, 2012, 12:53 [IST]
English summary
India's fast bowler Ishant Sharma is back in first-class cricket. After undergoing ankle surgery in March, the tall paceman is fully fit and is preparing for the Test series against England at home in November.
கருத்தை எழுதுங்கள்