Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை: ஹர்பஜன் சிறப்பாக பந்துவீச்சு-இந்தியாவுக்கு 90 ரன்களில் அபார வெற்றி

Posted by:
Published: Monday, September 24, 2012, 9:59 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை: ஹர்பஜன் சிறப்பாக பந்துவீச்சு-இந்தியாவுக்கு 90 ரன்களில் அபார வெற்றி
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான லீக் போட்டியில் அனுபவ சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 90 ரன்கள் வி்த்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஏ பிரிவை சேர்ந்த இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.

ஏ பிரிவில் ஏற்கனவே இந்தியா, இங்கிலாந்து அணிகள், அடுத்த சுற்றிற்கு முன்னேறிவிட்டதால், நேற்றைய போட்டி அதிகம் முக்கியத்துவம் பெறவில்லை. இதனால் இந்திய அணியில் துவக்க வீரர் ஷேவாக், வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர்கான், அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக டின்டா, ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

போட்டியின் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியி்ல் துவக்க வீரராக ஷேவாக் இல்லாத நிலையில், ஆல் ரவுண்டர் இர்பான் பதான் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். ஆனால் வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி அடித்த இர்பான் பதான் 8 ரன்களில் போல்டானார்.

அதன்பிறகு வந்த விராத் கோஹ்லி, கம்பிருடன் சேர்ந்து அதிரடியாக ஆடினார். 6 பவுண்டரிகளுடன் 40 ரன்களை எடுத்த கோஹ்லி, சுவானின் சுழலில் சிக்கினார். அரைசதத்தை நெருங்கிய கம்பிர் அதிரடியாக ஆட முயன்று 45 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அதுவரை பொறுமையாக ஆடி வந்த ரோஹித் சர்மா அதிரடிக்கு மாறினார். கேப்டன் டோணி அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க, ஸ்கோர் ஜெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது. சிக்ஸ் அடிக்க முயன்ற டோணி, பல வாய்ப்புகளை கோட்டை விட்டார். இந்த நிலையில் கடைசி ஓவரில் 1 சிக்ஸ், பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா அரைசதம் கடந்தார்.

கடைசி ஓவரின் 4வது பந்தை சிக்ஸ் அடிக்க முயன்ற டோணி, பவுண்டரி லைனில் ஹோல்ஸ் சிறப்பாக தடுத்து கொடுக்க, பட்லர் கேட்ச் பிடித்து அவுட்டானார். 33 பந்துகளில் 1 சிக்ஸ், 5 பவுண்டரிகள் விளாசிய ரோஹித் சர்மா 55 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 170 ரன்களை குவித்தது. 171 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் அலெக்ஸ் ஹோல்ஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். லூக் ரைட் 6 ரன்களில் எல்.பி.டபில்யூ ஆனார். மார்கன்(2), பேர்ஸ்டேவ்(1) என்று விக்கெட்கள் வரிசையாக சரிந்தது.

இந்த நிலையில் துவக்க வீரர் கீஸ்வெட்டர் மட்டும் ஒரு முனையில் நின்று சிறப்பாக ஆடி வந்தார். ஆனால் 25 பந்துகளில் 2 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்த கீஸ்வெட்டர் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பிறகு வந்த யாரும் பொறுப்பாக ஆடவில்லை. வரிசையாக விக்கெட்கள் சரிய 14.4 ஓவர்களில் 80 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.

இதன்மூலம் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் இர்பான் பதான், பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சிறப்பாக பந்துவீசிய ஹர்பஜன் சிங் ஆட்டநாயகன் விருதை பெற்ரார்.

குறைந்த ஸ்கோர்:

டுவென்டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி நேற்று தனது குறைந்த ஸ்கோரை (80 ரன்கள்) பதிவு செய்தது. இதற்கு முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 88 ரன்கள் எடுத்திருந்தது.

English summary
Harbhajan Singh, offspinner took 4/12 to power India to a commanding 90 run victory over England at the ICC World Twenty20 2012 at the R Premadasa Stadium here on Sunday night.
கருத்தை எழுதுங்கள்