Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பெண்களுக்கான டுவென்டி20 உலக கோப்பை: நாளை இலங்கையில் துவக்கம்

Posted by:
Published: Tuesday, September 25, 2012, 16:09 [IST]
 

பெண்களுக்கான டுவென்டி20 உலக கோப்பை: நாளை இலங்கையில் துவக்கம்
 

காலே: இலங்கையில் ஆண்களுக்கான டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் ஆதரவுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை முதல் பெண்களுக்கான டுவென்டி20 உலக கோப்பை தொடர் துவங்க உள்ளது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியுடன், லீக் சுற்று முடிவடைகிறது. இந்த நிலையில் பெண்களுக்கான டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் துவங்க உள்ளது.

பெண்களுக்கான டுவென்டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா என்று மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் தலா 4 அணிகள் வீதம் 2 பிரிவுகளில் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.

ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய 4 அணிகள் உள்ளன.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். இதன் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். அரையிறுதியில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறும்.

வரும் 27ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. அதன்பிறகு வரும் 29ம் தேதி இங்கிலாந்து உடனும், 1ம் தேதி பாகிஸ்தான் உடனும் மோத உள்ளது. உலக கோப்பை தொடரின் நாளைய முதல் லீக் போட்டியில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இறுதிப் போட்டி வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது.

டுவென்டி20 உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் காலே மைதானத்திலும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி கொழும்பு மைதானத்திலும் நடைபெற உள்ளது. இதில் காலே மைதானத்தில் நடைபெற உள்ள லீக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுகிறது.

English summary
Away from the hype surrounding the mens tournament, the Womens World Twenty20 will start from tomorrow. The first match will be between Srilanka and South Africa.
கருத்தை எழுதுங்கள்