Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் தொடரில் ஆடிய அனுபவம் இந்தியாவை எதிர்க்க கை கொடுக்கும்: ஆல்பி மார்கல்

Posted by:
Updated: Wednesday, September 26, 2012, 14:07 [IST]
 

 ஐபிஎல் தொடரில் ஆடிய அனுபவம் இந்தியாவை எதிர்க்க கை கொடுக்கும்: ஆல்பி மார்கல்
 

கொழும்பு: ஐபிஎல் தொடரில் பங்கேற்று அனுபவம் இருப்பதால், டுவென்டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் இந்திய அணியை எதிர்த்து ஆடுவது எளிது என்று தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் ஆல்பி மார்கல் தெரிவித்துள்ளார்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. நாளை முதல் சூப்பர்-8 சுற்றுக்கான போட்டிகள் துவங்க உள்ளது.

லீக் சுற்றில் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, சூப்பர்-8 சுற்றில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளை எதிர்த்து ஆட உள்ளது. அடுத்த மாதம் 2ம் தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஆடி அனுபவம் கொண்ட எங்களுக்கு, இந்திய அணியை எதிர்த்து ஆடுவது எளிதாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் ஆல்பி மார்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நான் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறேன். எனவே அந்த அணியில் உள்ள டோணி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின் போன்ற வீரர்களுடன் நெருங்கி பழகி உள்ளேன். இதன்மூலம் இந்திய வீரர்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்து தெரிந்து கொண்டேன்.

இதனை தென் ஆப்பிரிக்க அணியில் உள்ள எனது சகவீரர்களிடம் பகிர்ந்து கொள்ள உள்ளேன். இதன் மூலம் போட்டிக்கான திட்டம் அமைத்து, நாங்கள் செயல்பட உள்ளோம். ஆனால் இரு அணிகளும் பலமான அணிகள் என்பதால், நெருக்கடியான சூழ்நிலையில் எந்த அணி சிறப்பாக ஆடும் என்பது தான் முக்கியம்.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளன. இலங்கை ஆடுகளங்கள் மந்தமாக இருப்பதால் பந்துவீசும் போது வேகம் குறைந்துவிடுகிறது. ஆனால் சுழல்பந்திற்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுக்கிறது. எனவே அதற்கு ஏற்றாற்போல தென் ஆப்பிரிக்க அணி தயாராகி வருகிறது.

மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ள இலங்கை மைதானங்களில் முதலில் பேட்டிங் செய்வது உகந்தது என்று நினைக்கிறேன். போட்டியில் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினால், பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது சிரமம். இலங்கையில் ஆடுகளங்களில் அணியின் வெற்றிக்கு 11 வீரர்களும் சிறப்பாக ஆட வேண்டியுள்ளது. இதில் 3 அல்லது 4 வீரர்கள் அணியின் 'மேட்ச் வின்னிங்' வீரர்களாக செயல்பட வேண்டும்.

தென் ஆப்பிரிக்க அணியி்ல் நான் வழக்கம் போல ஆல் ரவுண்டர் பணியை மேற்கொள்ள உள்ளேன். கடைசி ஓவர்களில் நான் பேட்டிங் செய்ய செல்லும் போது, எனக்கு பயம் ஏற்படுகிறது. ஆனால் ரன்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும் போது, அந்த பயம் மறைந்துவிடுகிறது. இதற்காக வலைப்பயிற்சியில் ஈடுபடுகிறேன். வலைப்பயிற்சியில் பெற்ற பயிற்சியின் மூலம் என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன் என்றார்.

Story first published:  Wednesday, September 26, 2012, 13:50 [IST]
English summary
Albie Morkel, a regular in the Chennai Super Kings line-up during IPL, says the experience of sharing the dressing room with Dhoni, Ashwin and Suresh Raina will help South Africa when they take on India in their final Super Eight game of the World Twenty20.
கருத்தை எழுதுங்கள்