Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

வங்கதேச அணியை வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்- இந்தியாவுடன் மோதுகிறது

Posted by:
Published: Wednesday, September 26, 2012, 10:07 [IST]
 

வங்கதேச அணியை வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்- இந்தியாவுடன் மோதுகிறது
 

பல்லகெலே: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான், சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் சூப்பர்-8 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகளுக்காக பிரிக்கப்பட்ட 4 பிரிவுகளில், டி பிரிவை சேர்ந்த அணிகளில் நியூசிலாந்து ரன் ரேட் மூலம் சூப்பர்-8 சுற்றிற்கு எளிதாக முன்னேறியது.

இந்த நிலையில் டி பிரிவை சேர்ந்த பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளில், சூப்பர்-8 பிரிவுக்கு முன்னேறும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியின் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

துவக்க வீரர்களான தமிம் இக்பாலும், முஹம்மது அஷ்ரபுலும் ஜோடி சேர்ந்து அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர். பொறுமையாக ஆடிய அஷ்ரபுல் 14 ரன்களில் போல்டானார். ஆனால் துவக்க முதலே அதிரடியாக ஆடிய தமிம் இக்பால் 12 பந்துகளில், 5 பவுண்டரிகள் விளாசி 24 ரன்களை சேர்த்து ரன் அவுட்டானார்.

அதன்பிறகு வந்த சாகிப் அல் ஹசன் அதிரடியாக ஆடி, பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவருக்கு கேப்டன் முஷ்பிகிர் ரஹிம் ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். 10.4 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது வங்கதேசம் அணி. ஆனால் 25 ரன்கள் எடுத்த முஷ்பிகிர் ஆட்டமிழந்தார். மஹமுதுல்லா டக் அவுட்டாகி வெளியேற, நாசீர் ஹூசைன் சற்றுநேரம் ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார்.

கடைசி ஓவர் வரை ஆடிய சாகிப் அல் ஹசன் 54 பந்துகளில் 2 சிக்ஸ், 11 பவுண்டரிகள் அடித்து 84 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்ற ஹசன் கேட்சாகி வெளியேறினார். வங்கதேச அணியின் பேட்டிங்கின் கடைசி பந்தில் ஹூசைனும் அவுட்டானார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் அணி 6 விக்கெட்களை இழந்து 175 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் யாசீர் அராபத் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

176 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. ஆனால் பாகிஸ்தானை 139 ரன்னுக்குள் மடக்கினால் மட்டுமே சூப்பர்-8 சுற்றிற்கு முன்னேறலாம் என்ற சூழலில் வங்காளதேச பவுலர்கள் பந்து வீசினர். ஆனால் பாகிஸ்தான் துவக்க வீரர்களான இம்ரான் நசீர், கேப்டன் முஹம்மது ஹபீஸ் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

13வது ஓவர் வரை துவக்க ஜோடியை பிரிக்க முயன்ற வங்கதேசத்தின் முயற்சி வீணானது. இதை பயன்படுத்தி கொண்ட இம்ரான் நாசீர் 36 பந்துகளில் 3 சிக்ஸ், 9 பவுண்டரிகள் அடித்து 72 ரன்களை குவித்து அவுட்டானார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய கேப்டன் முஹம்மது ஹபீஸ் 45 ரன்கள் எடுத்த நிலையில் அதே ஓவரில் வெளியேறினார்.

அதன்பிறகு பாகிஸ்தான் அணியின் வெற்றி எளிதான நிலையில் நசிர் ஜாம்ஷெட், கம்ரன் அக்மல் ஜோடி பொறுப்பாக ஆடி, அணிக்கு வெற்றியை பெற்று தந்தனர். பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 178 ரன்களை குவித்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இதன்மூலம் தொடரின் லீக் சுற்றுடன் வங்கதேசம் வெளியேறியது. லீக் சுற்றில் 2 வெற்றிகளை பெற்ற பாகிஸ்தான், சூப்பர்-8 சுற்றிற்கு முன்னேறியது. சூப்பர்-8 சுற்றில் வரும் 30ம் தேதி இந்தியாவுடன், பாகிஸ்தான் மோத உள்ளது.

ஏற்கனவே பயிற்சி போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இந்தியா, சூப்பர்-8 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டிய நிலையில் உள்ளது.

English summary
Pakistan crushed Bangladesh by eight wickets to ease into the Super Eight stage of ICC World Twenty20 2012 on Tuesday night.
கருத்தை எழுதுங்கள்