Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக சந்தீப் பாட்டீல் தேர்வு

Posted by:
Updated: Thursday, September 27, 2012, 17:05 [IST]
 

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக சந்தீப் பாட்டீல் தேர்வு
 

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக சந்தீப் பாட்டீல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அதிக சர்ச்சையை கிளப்பிய மொஹிந்தர் அமர்நாத் தேர்வுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் உறுப்பினர்கள் ஹிர்வானி, சுரேந்திர பாவே, ராஜா வெங்கட் ஆகியோரின் 4 ஆண்டு பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில், இன்று மும்பையில் பிசிசிஐயின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் இந்திய வீரர்கள் இடையே தேர்வுக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்காக கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் தேர்வுக்குழு உறுப்பினராக கடந்த 1 ஆண்டு மட்டுமே பணியாற்றிய மொஹிந்தர் அமர்நாத், தேர்வுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் தேர்வுக்குழு தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்ற கருத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்வுக்குழுத் தலைவராக தெற்கு மண்டலத்தின் ரோஜர் பின்னிக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் கும்ளே, செயலாளர் ஸ்ரீநாத் ஆகியோரின் ஆதரவு இருந்தது. ஆனால் பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் கடந்த 1983ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியின் பேட்ஸ்மேன் சந்தீப் பாட்டீல், புதிய தேர்வுக்குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேர்வுக்குழுவின் தலைவராக பதவி கிடைக்கவிட்டாலும், ரோஜர் பின்னி தேர்வுக்குழுவின் 5 உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார். இவர் குழுவின் தெற்கு மண்டலத்தில் ஸ்ரீகாந்த்தின் இடத்தை நிரப்புவார். மேலும் வடக்கு மண்டலத்தில் விக்ரம் ராத்தோரும், கிழக்கு மண்டலத்தில் சபா கரீம், மத்திய மண்டலத்தில் ராஜிந்தர் சிங் ஹன்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய தேர்வுக் குழு உறுப்பினர்களின் சம்பளமும், ஆண்டிற்கு ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்வுக்குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சந்தீப் பாட்டீல் ஏற்கனவே இந்தியா, கென்யா, ஓமான் ஆகிய அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியின் இயக்குனராக சந்தீப் பாட்டீல் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Thursday, September 27, 2012, 11:16 [IST]
English summary
The Board of Control for Cricket in India (BCCI) is all set to revamp its senior selection committee by making at least four changes in the five-man panel following the completion of their term.
கருத்தை எழுதுங்கள்