Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஆஸி.,க்கு எதிராக 5 பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கலாம்: டோணி

Posted by:
Published: Thursday, September 27, 2012, 18:24 [IST]
 

ஆஸி.,க்கு எதிராக 5 பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கலாம்: டோணி
 

கொழும்பு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர்-8 போட்டியில் இந்திய அணி 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளதாக இந்திய கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெற உள்ள சூப்பர்-8 போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இதற்காக இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் சேர்ந்த வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். காயம் காரணமாக நேற்று ஓய்வில் இருந்த இந்திய துவக்க வீரர் ஷேவாக், இன்று அரை மணிநேரம் பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளதாக, இந்திய கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர்-8 போட்டியில் இந்திய அணி 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் வீரர்களை எப்படி ஜோடி சேர்ப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது ஒரு புதிய ஆடுகளமாக உள்ளதை கருத்தில் கொண்டு, அணியில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதுவரை நான் எடுத்த முடிவுகளிலேயே இதுதான் மிக கடினமானது என்று நினைக்கிறேன்.

எந்த வீரர்களை ஜோடி சேர்த்தால் சிறப்பாக அமையும் என்பதை குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. எனவே இந்திய அணி எப்படி களமிறங்கும் என்று பொருத்திருந்து பாருங்கள். அணிக்கு வெற்றி கிடைக்கும் வகையில் எங்கள் முடிவு இருக்கும்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், சிறந்த வீரர்கள் என்பது எங்களுக்கு தெரியும். இருப்பினும் அவர்களை வீழ்த்தும் திறமை இந்திய பந்துவீச்சாளர்களிடம் உள்ளது. இதற்காக சரியான இடங்களில் பந்துவீச வேண்டியுள்ளது.

இந்திய அணியின் மீது நான் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே எதிரணியினரின் பேச்சை நான் பெரிய பொருட்டாக எடுத்து கொள்வதில்லை. இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக ஆடும் வீரர்கள் உள்ளனர். ஆனால் 'ஷாட்பால்' வீசுவது இந்திய அணியின் பெரிய பிரச்சனையாக உள்ளது.

ஒரு கிரிக்கெட் அணி என்பது எல்லா பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். துணை கண்டங்களில் உள்ள ஆடுகளங்களை பொறுத்த வரை, முதல் 8 ஓவர்களுக்கு பந்துகள் பேட்டை நோக்கி வருகின்றன. ஆனால் 8 முதல் 12வது ஓவர் வரை பந்துகளின் வேகம் குறைக்கிறது. எனவே பந்துகள் பேட்டிற்கு வரும் போதே, துவக்க வீரர்கள் வேகமாக ரன்களை சேர்க்க வேண்டியுள்ளது. இந்திய அணியில் சிறந்த துவக்க வீரர்களும், ஓரிரு ரன்களை துரிதகதியில் எடுக்கும் வீரர்களும் உள்ளனர்.

எனது தலைமையிலான இந்திய அணியில் ஷேவாக், ஜாகீர்கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். மேலும் இளம்வீரர்களும் சமீபகாலமாக சிறப்பாக ஆடி வருகின்றனர் என்றார்.

கேப்டன் டோணி கூறுவது போல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 5 பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கினால், பேட்ஸ்மேன்களில் யுவராஜ் சிங் அல்லது ஷேவாக்கிற்கு ஓய்வு அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். என்ன செய்ய போறார் டோணி?

English summary
India captain Mahendra Singh Dhoni on Saturday said the team will go in with five bowlers in its World Twenty20 Super Eight match against Australia but it will be one of the toughest decisions of his career to choose between Virender Sehwag and Yuvraj Singh.
கருத்தை எழுதுங்கள்