Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை: கெய்ல், ஜான்சன் ஜோடியின் அதிரடியில் மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி

Posted by:
Published: Friday, September 28, 2012, 11:31 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை: கெய்ல், ஜான்சன் ஜோடியின் அதிரடியில் மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி
 

பல்லேகெலே: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-8 சுற்றில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை, மேற்கிந்திய தீவுகள் 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் ஜான்சன் சார்லஸ், கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது அணியின் வெற்றிக்கு உதவியது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் சூப்பர்-8 சுற்று போட்டிகள் துவங்கியது. நேற்று நடைபெற்ற 2வது போட்டியில், மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் போட்டியில் சூப்பர் ஓவர் முறை அறிவிக்கப்பட்டதால், 2வது போட்டி சற்று தாமதமாக துவங்கியது.

இந்த நிலையில் போட்டியின் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜான்சன் சார்லஸ், கிறிஸ் கெய்ல் ஜோடி, அணிக்கு அதிரடி துவக்கத்தை அளித்தது. 11வது ஓவர் வரை அதிரடியை தொடர்ந்த இந்த ஜோடி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 100 ரன்களை கடக்க உதவியது.

கிறிஸ் கெய்ல் 35 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரிகள் விளாசி அரைசதம் கடந்தார். ஆனால் 58 ரன்கள் எடுத்த நிலையில் பவுண்டரி லைனில் கேட்சாகி வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய மற்றொரு துவக்க வீரர் ஜான்சன், அரைசதம் கடந்தும் அதிரடியை தொடர்ந்தார். மார்டின் சாமுவேல்ஸ்(2), போல்லார்டு(1) ஆகியோர் வந்த வேகத்தில் பிரிவியன் திரும்பினர்.

அதிரடியாக ஆடி வந்த ஜான்சன் 56 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரிகள் அடித்து 84 ரன்களை குவித்து ஜோனாதானிடம் கேட்சாகி வெளியேறினார். கேப்டன் சம்மி 4 ரன்களில் போல்டானார்.

கடைசி ஓவரில் ரஸல் ஒரு பவுண்டரியும், பிராவோ 2 பவுண்டரிகளும் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் கீஸ்வெட்டர், 2 பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த லூக் ரைட், சிலீப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் ஓவரை வீசிய ராம்பால், 2 விக்கெட்களுடன் மெய்டன் ஓவராக வீசினார்.

அதன்பிறகு அலெக்ஸ் ஹேல்ஸ் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தார். ஆனால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய பேர்ஸ்டோவ் 18 ரன்கள் விடை பெற்றார். அதன்பிறகு வந்த இயான் மார்கன் அதிரடியாக ஆட இங்கிலாந்தின் ஸ்கோர் உயர்ந்தது. அலெக்ஸ் ஹேல்ஸ், இயான் மார்கன் ஆகியோர் அரைசதம் கடந்தும் அதிரடியை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 23 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் சாமுவேல்ஸ் சிறப்பாக பந்துவீசி, இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு தடுத்தார். முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. ஆனால் 4வது பந்தில் ஹேல்ஸ் அவுட்டானார். 51 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்த ஹோல்ஸ் 68 ரன்களில் அவுட்டானார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் எடுத்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி பெற்றது. மார்கன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து 71 ரன்களை எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜான்சன் சார்லஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

English summary
West Indies survived a late assault from Eoin Morgan to eke out a 15 run win over England in the Super Eights of ICC World Twenty20 2012 on Thursday night.
கருத்தை எழுதுங்கள்