Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை: சூப்பர் ஓவரில் மலிங்கா அசத்தல் பந்துவீச்சு-இலங்கைக்கு அபார வெற்றி

Posted by:
Published: Friday, September 28, 2012, 11:24 [IST]
 

பல்லேகெலே: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி 'டை'யில் முடிந்தது. ஆனால் வெற்றியாளரை கண்டறியும் சூப்பர் ஓவரில் இலங்கை பந்துவீச்சாளர் மலிங்கா சிறப்பாக பந்துவீசி, இலங்கைக்கு வெற்றியை பெற்று தந்தார்.

டுவென்டி20 உலக கோப்பை: சூப்பர் ஓவரில் மலிங்கா அசத்தல் பந்துவீச்சு-இலங்கைக்கு அபார வெற்றி
டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சூப்பர்-8 சுற்று போட்டிகள் துவங்கியது. இதில் முதல் போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்களான ராப் நிகோல், மார்டின் கப்டில் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். மார்டின் கப்டில் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து பெரேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிரண்டன் மெக்கலம் வந்த வேகத்தில் 2 சிக்ஸ் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

சிறப்பாக ஆடிய ராப் நிகோல் அரைசதம் கடந்தார். 40 பந்துகளில் 4 சிக்ஸ் 3 பவுண்டரிகள் அடித்து 58 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். கேப்டன் ரோஸ் டெய்லர்(23) எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. அதன்பிறகு வந்த பேட்ஸ்மேன்களான ஜேக்கப் ஓரம்(6), நாதன் மெக்கல்லம்(3), வில்லியம்சன்(4) ஆகியோர் வரிசையாக வெளியேறினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்களை இழந்த நியூசிலாந்து அணி 174 ரன்களை குவித்தது

175 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு கேப்டன் ஜெயவர்த்தனே, தில்ஷன் ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது. அதிரடியாக ஆடிய ஜெயவர்த்தனே 26 பந்துகளில் 3 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 44 ரன்களை குவித்து அவுட்டானார்.

அடுத்து வந்த சங்கக்காரா வந்த வேகத்தில் 4 பவுண்டரிகள் அடித்து 21 ரன்கள் குவித்து வெளியேறினார். தில்ஷன் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். மென்டிஸ் 8 ரன்களில் ஏமாற்றினார். இந்த நிலையில் 53 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து 76 ரன்கள் குவித்த தில்ஷன் ரன் அவுட்டானார்.

பெரேரா 5 ரன்களில் வெளியேற, கடைசி ஓவரில் இலங்கை வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டது. டிம் சவுத்தி வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்தில் தலா ஒரு ரன் வீதம் கிடைத்தது.

நான்காவது பந்தை தவறவிட்ட திரிமன்னே, 5வது பந்தை பவுண்டரிக்கு அடித்தார். இதனால் கடைசி பந்தில் இலங்கை வெற்றி பெற ஒரு ரன் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் ரன் ஓட திரிமன்னே ரன் அவுட்டானார். பலமுறை ரி-ப்ளே போட்டு பார்த்து ரன் அவுட் உறுதி செய்யப்பட்டது. போட்டியில் இரு அணிகளும் 174 ரன்கள் எடுத்ததால், வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை அறிவிக்கப்பட்டது.

சூப்பர் ஓவர்:

சூப்பர் ஓவர் முறையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வீதம் வழங்கப்படும். இதில் ஒரு அணியில் 3 பேட்ஸ்மேன்கள் வரை பேட்டிங் செய்யலாம். முதலில் களமிறங்கிய இலங்கை அணி சூப்பர் ஓவரில் 1 விக்கெட் இழந்து 13 ரன்கள் எடுத்தது.

எனவே 14 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து வெற்றி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. இலங்கை தரப்பில் மலிங்கா பந்துவீசினார். மார்டின் கப்டில் 3 ரன்கள் எடுத்த நிலையில் பந்தை சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால் பவுண்டரி லைனில் கேட்சாகி அவுட்டானார். இதனால் சூப்பர் ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. சிறப்பாக பேட்டிங் செய்த இலங்கை வீரர் தில்ஷன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

1000 ரன்கள்:

நேற்றைய போட்டியில் இலங்கை வீரர் ஜெயவர்த்தனே 2 ரன்களை எடுத்த போது, சர்வதேச டுவென்டி20 போட்டிகளில் 1,000 ரன்களை கடந்த 4வது வீரர் என்ற சாதனையை படைத்தார். அதேபோல இலங்கையின் மற்றொரு வீரரான தில்ஷன் 44 ரன்களை எடுத்த போது, அவரும் 1000 ரன்களை கடந்து, இப்பட்டியலில் சேர்ந்தார்.

English summary
Sri Lanka win super over, after the match was tied as both teams scored 174 at the end of 20 overs, which was a first of it's kind in World T20 2012, during the Super Eights clash at Pallekele International Cricket Stadium on Thursday.
கருத்தை எழுதுங்கள்