Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

உமர் குல், உமர் அக்மல் அதிரடி ஆட்டம்- பாகிஸ்தானுக்கு கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி!

Posted by:
Published: Saturday, September 29, 2012, 11:00 [IST]
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை தொடரில் நேற்று பாகிஸ்தானின் உமர் குல், உமர் அக்மல் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி, தென் ஆப்பிரிக்காவின் வெற்றி வாய்ப்பை பறித்தது. இதனால் பாகிஸ்தான் கடைசி ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

உமர் குல், உமர் அக்மல் அதிரடி ஆட்டம்- பாகிஸ்தானுக்கு கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி!
டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சூப்பர்-8 சுற்று போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

பாகிஸ்தானின் அபார பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க வீரர் ரன் சேர்க்க திணறினர். மேலும் விக்கெட்களை வரிசையாக இழந்தனர். துவக்க வீரர் ஹசிம் ஆம்லா(6), ரிச்சார்டு லீவி(8), காலிஸ்(12) ஆகியோர் வரிசையாக அவுட்டாகினர். அதன்பிறகு வந்த டும்மினி, பார்ஹன் ஜோடி பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. ஆனால் பர்ஹான் 18 ரன்களில் வெளியேறினார்.

அதன்பிறகு டிவில்லியர்ஸ் உடன் ஜோடி சேர்ந்த டும்மினி பொறுப்பாக ஆடினார். டிவில்லியர்ஸ் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். டும்மினி 48 ரன்கள் எடுத்து, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்களை இழந்து 133 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹபீஸ், யாசிர் ஆகியோர் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

134 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியும் ரன்களை சேர்க்க திணறியது. இம்ரான் நசிர்(14), ஹபீஸ்(15) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். அதன்பிறகு வந்த நசிர் ஜாம்ஷெட்(0), கம்ரான் அக்மல்(1), சோயப் மாலிக்(12), அப்ரிதி(0), யாசிர் அராபத்(3) ஆகியோர் வரிசையாக வெளியேறினர்.

கடைசி கட்டத்தில் உமர் குல், உமர் அக்மல் ஜோடி பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. ஒரு கட்டத்தில் 7 விக்கெட்களை இழந்து 76 ரன்களில் தவித்த பாகிஸ்தான் அணியை மீண்டும் இந்த ஜோடி வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. உமர் குல் அதிரடியாக 3 சிக்ஸ்களை அடித்தார். 8வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த போது உமர் குல் 32 ரன்களில் அவுட்டானார்.

கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டது. 2வது பந்தை சிக்சர் அடித்த உமர் அக்மல், 3வது பந்தில் சிங்கிள் எடுத்தார். 4வது பந்தில் அஜ்மல் ஒரு பவுண்டரி அடிக்க, பாகிஸ்தான் 19.4 ஓவர்களின் முடிவில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது. உமர் அக்மல் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணியில் தரப்பில் ஸ்டைன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். சிறப்பாக ஆடிய உமர் குல் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

English summary
Yet another fabulous performance by Pakistan as Umar Akmal and Umar Gul rose to the occasion after being seven down, to win by two wickets as they successfully chased the target set by South Africa in the Super Eights clash at R Premadasa Stadium in Colombo on Friday.
கருத்தை எழுதுங்கள்