Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

வார்னர், வாட்சன் அதிரடியில் இந்தியா சரண்டர்- ஆஸ்திரேலியா அபார வெற்றி

Posted by:
Published: Saturday, September 29, 2012, 10:32 [IST]
 

வார்னர், வாட்சன் அதிரடியில் இந்தியா சரண்டர்- ஆஸ்திரேலியா அபார வெற்றி
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி தோல்வியுடன் துவங்கியுள்ளது. நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியினர் சொதப்பலாக பேட்டிங் செய்தனர். மேலும் வார்னர், வாட்சன் ஆகியோரின் அதிரடியில் ஆஸ்திரேலியா அணி எளிதாக வெற்றி பெற்றது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து நேற்று நடைபெற்ற சூப்பர்-8 போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இலங்கை ஆடுகளங்கள் சுழல்பந்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று கருதிய இந்திய கேப்டன் டோணி, அணியில் ஹர்பஜன் சிங், அஸ்வின், பியூஸ் சாவ்லா ஆகிய 3 சுழல்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். இதனால் துவக்க வீரர் ஷேவாக்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் துவக்கம் முதலே இந்திய வீரர்கள் மந்தமாக ஆடினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் திணறிய கம்பிர், இர்பான் பதான் ஜோடி மெதுவாக ரன்களை சேர்த்தது. இர்பான் பதான் ரன்னுக்கு அழைக்க, சற்று மெதுவாக ஓடி வந்த கம்பிர் 17 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.

அடுத்து வந்த விராத் கோஹ்லி அதிரடியாக 2 பவுண்டரிகளை அடித்து 15 ரன்களை எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். வாட்சனின் பந்தில் திணறிய யுவராஜ் சிங் 8 ரன்களில் அவுட்டானார். நீண்டநேரம் ஆடிய இர்பான் பதான் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பார்மிற்கு திரும்பினார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 1 ரன்களில் ஏமாற்றினார்.

அதன்பிறகு வந்த கேப்டன் டோணியும், சுரேஷ் ரெய்னாவும் சேர்ந்து சற்றுநேரம் ரன்கள் சேர்த்தனர். டோணி 15 ரன்களில் திருப்திபட்டு கொண்டார். கடைசி ஓவரில் சுரேஷ் ரெய்னா 26 ரன்களுக்கு அவுட்டானார். கடைசி கட்டத்தில் அஸ்வின் ஒரு சிக்ஸ் அடித்து ஆறுதல் அளித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்தியா 7 விக்கெட்களை இழந்து 140 ரன்களை சேர்த்தது. அஷ்வின்(16), ஹர்பஜன்(1) ஆகியோர் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

141 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்கள் ஷேன் வாட்சனும், டேவிட் வார்னரும் ஜோடி சேர்ந்து வாணவேடிக்கை காட்டினர். போட்டியின் முதல் ஓவரில் சில நிமிடங்கள் மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு மீண்டும் போட்டி துவங்கியது.

வாட்சன், வார்னர் ஜோடி, இந்திய பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினர். அஸ்வின், ஹர்பஜன் சிங், சாவ்லா என்று சுழல்பந்துவீச்சாளர்களின் பந்துகளில் சிக்ஸ், பவுண்டரிகளும் பறந்தது. வாட்சன் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

ஆஸ்திரேலியா வெற்றி பெற 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், யுவராஜ் சிங்கின் பந்தில் வாட்சன் வெளியேறினார். வாட்சன் 42 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 72 ரன்களை எடுத்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய டேவிட் வார்னர் 41 பந்துகளில் 3 சிக்ஸ், 7 பவுண்டரிகள் அடித்து 63 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். 14.5 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

எட்டு பவுலர்கள்:

இந்திய அணியில் நேற்று 8 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும், தோல்வி தழுவியது. டுவென்டி20 போட்டிகளில் 8 பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்துவது 3வது முறையாகும்.

English summary
Australia demolished India by nine wickets and 31 balls to spare in their Super Eights game at the ICC World Twenty20 2012 on Friday night at the R Premadasa Stadium. Shane Watson's dazzling all-round display handed India a humiliating defeat. He won his third successive Man-of-the-match award in the tournament.
கருத்தை எழுதுங்கள்