Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: சிறப்பாக பேட்டிங் செய்த கோஹ்லி-டோணி பாராட்டு

Posted by:
Published: Monday, October 1, 2012, 17:23 [IST]
 

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: சிறப்பாக பேட்டிங் செய்த கோஹ்லி-டோணி பாராட்டு
கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், சிறப்பாக ஆடிய விராத் கோஹ்லி 78 ரன்களை குவித்து அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். இதையடுத்து அவரது ஆட்டத்தை கேப்டன் டோணி பாராட்டியுள்ளார்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்-8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. கிரிக்கெட் உலகில் அதிக பரபரப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய வீரர் விராத் கோஹ்லி அதிரடியாக ஆடி 2 சிக்ஸ், 8 பவுண்டரிகள் அடித்து மொத்தம் 78 ரன்களை எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். மேலும் தமிழக வேகப்பந்துவீச்சாளர் பாலாஜி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய விராத் கோஹ்லி மற்றும் பந்துவீச்சாளர்களை கேப்டன் டோணி பாராட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி, பாகிஸ்தான் அணியை குறைந்த ஸ்கோரில் மடக்கிவி்ட்டனர். ஜாகிர்கான், பாலாஜி, இர்பான் பதான் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். மேலும் 7 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, பகுதிநேர பந்துவீச்சாளர்களும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து பந்துவீசினர்.

துவக்க வீரர் கம்பிர் துவக்கத்திலேயே அவுட்டாக, அணிக்கு ஷேவாக் சிறப்பான துவக்கத்தை அளித்தார். இந்திய வீரர்கள் சுழல்பந்துவீச்சில் சிறப்பாக ஆடினர். இந்திய அணியில் விராத் கோஹ்லி தனது பொறுப்பை உணர்ந்து ஆடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு வருடமாக அவர் சிறப்பான ஆடி வருகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால் எங்களுக்குள் நம்பிக்கையற்ற நிலை ஏற்படவில்லை. ஒரு அணியில் நம்பிக்கையற்ற நிலை ஏற்பட்டால், வீரர்களிடையே மனஅழுத்தம் ஏற்படும். எனவே கடந்த கால போட்டிகளை குறித்து யோசிக்காமல், அடுத்து வரும் போட்டியை குறித்து மட்டும் நாங்கள் யோசித்து வருகிறோம்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி துவங்கும் முன், இந்திய வீரர்களின் அறையில் எந்த டென்ஷனும் இருக்கவில்லை. இதனால் வீரர்கள் இடையே வெற்றிக்கான உற்சாகத்தை காண முடிந்தது. மனஅமைதியுடன் இருக்கும் போது வெற்றி பெறுவது எளிது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சாதாரணமாக, பொறுமையாக இருந்தேன்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றாலே அதிக பரபரப்பை ஏற்படுத்தும் போட்டியாகும். ஆனால் இந்தியாவிற்கு மீண்டும் ஒரு வெற்றி பெற்று தர, எனக்கு கடவுள் உதவி செய்தார் என்றார்.

English summary
Indian captain Dhoni praise on his bowlers and batsman Virat Kohli for the eight wicket thrashing of Pakistan in their Super Eights match of World Twenty20.
கருத்தை எழுதுங்கள்