Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஊக்க மருந்து பயன்படுத்திய அப்துல் ரஹ்மான் நீக்கம்: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி

Posted by:
Published: Wednesday, October 3, 2012, 12:55 [IST]
 

ஊக்க மருந்து பயன்படுத்திய அப்துல் ரஹ்மான் நீக்கம்: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
 

லாகூர்: ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் அப்துல் ரஹ்மான், சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடரில் கலந்து கொள்ளமாட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் இந்த மாதம் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின் உள்ளூர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இதில் பாகிஸ்தானின் உள்ளூர் அணியில் சுழல்பந்துவீச்சாளர் அப்துல் ரஹ்மான் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அப்துல் ரஹ்மான் சிக்கினார். இதனால் சாம்பியன்ஸ் லீக் தொடரில், அவர் பங்கேற்கமாட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் சோமர்சேட் அணிக்காக அப்துல் ரஹ்மான் ஆடினார். அப்போது அவருக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து முழு தகவல்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளோம். ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக, அப்துல் ரஹ்மான் தண்டனை பெறுவார் என்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அப்துல் ரஹ்மான் தற்போது நாடு திரும்பி உள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து முழு விபரங்களும் கிடைத்த பிறகு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினராக உள்ள பாகிஸ்தான், உலக ஊக்க மருந்து தடுப்பு சங்கத்தின் நடவடிக்கைகளை ஏற்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக அப்துல் ரஹ்மானுக்கு அளிக்கப்பட உள்ள தண்டனையும் ஏற்று கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றார்.

பாகிஸ்தான் உள்ளூர் அணியின் முக்கிய சுழல்பந்துவீச்சாளரான அப்துல் ரஹ்மான், அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதால், சாம்பியன் லீக் தொடரில் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு காயத்திற்காக மூலிகை மருந்து உட்கொண்ட போது, இலங்கை அணியின் துவக்க வீரரான உபுல் தரங்கா, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டார். இதனால் கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது, நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். அதன்பிறகு அவருக்கு 3 மாதங்கள் விளையாட, சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The Pakistan Cricket Board (PCB) has withdrawn Abdul Rehman from the Champions League Twenty20 tournament in the wake of Test spinner failing a dope test in England.
கருத்தை எழுதுங்கள்